ஈரோடு ஐயன் காடு பகுதியைச் சேர்ந்த தறிப்பட்டறை தொழிலாளி துரையன். இவரது மனைவி உமா. துரையனின் சொந்த ஊரில் கோவில் திருவிழா நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து துரையன் அவரது வீட்டில் நண்பர்களுக்கு கிடா விருந்து கொடுத்துள்ளார். கிடா விருந்து முடிந்த பிறகு நேற்று இரவு துரையன் மற்றும் அவரது நண்பர்கள் நெரிக்கல்மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர்.
அப்போது கிடா விருந்து தொடர்பாக 'ஏண்டா எனக்கு தலைக்கறி வைக்கல...? ஏண்டா எனக்கு குடல்கறி வைக்கல...?' என ஆளுக்கு ஆள் துரையனிடம் கேட்க அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நண்பர்கள் அனைவரும் சேர்ந்து துரையனை தாக்கியுள்ளனர். அப்போது அருகில் இருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து துரையன் தலையில் போட்டு விட்டனர். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார்.
துரையனை தாக்கிய நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். துரையனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த துரையன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் துரையனை கொன்றதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் அசோகபுரம் கரிகாலன் வீதியை சேர்ந்த பாபு, கருங்கல்பாளையம் கக்கன் நகரை சேர்ந்த மாதேஷ், அசோகபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் ஆகியோரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.