ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனைகளும், ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி பங்களாபுதூர் சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அரக்கன் கோட்டை வாணிபுத்தூர் பள்ளி அருகே உள்ள ஒரு பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வாணிபுத்தூர் பள்ளி அருகே பெட்டிக்கடை செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. திடீரென போலீசார் அந்த கடைக்குள் சென்று சோதனை செய்த போது பல்வேறு போதைப் பொருட்கள் புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக டி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த பன்னீர், சாதுமுகை பகுதி சேர்ந்த சுரேஷ், மற்றும் ரமேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடையிலிருந்து 17 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு 42 ஆயிரத்து 860 ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது.