ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர்.
தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சி.பி.தளபதி பேசும்போது, "ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வேளாண் குறைதீர் கூட்டம் பெயரளவிற்கு சடங்காக நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். மேலும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கூறும் குறைகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும்போது ஊக்கத்தொகை வழங்கவில்லை. இது தொடர்பாக ஆறு கூட்டங்களில் பேசிய பின்னரும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் கோபி, பெருந்துறை வட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்களில் தவறுதலாக வக்பு வாரிய நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கடந்த 4 கூட்டங்களில் பேசியும் எந்த முன்முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. இவ்வாறு பல்வேறு பிரச்சனைகள் குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போன்று நடத்தப்படும் கூட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக" வேதனையுடன் தெரிவித்தார்.
முன்னதாக மறைந்த ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியர் கதிரவன், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா, விவசாயிகள் சங்கத் தலைவர் காசியண்ணன் ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.