சென்னையில் வீட்டில் வளர்த்து வரும் நாய்கள் பொதுமக்களைக் கடித்து காயப்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் அரசின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கும் நாய்களைக் கண்காணிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாநகர நல அலுவலர் மருத்துவர் பிரகாஷ் கூறியதாவது, ''ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 1.60 லட்சம் வீடுகள் உள்ளன. இதில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் வீடுகளிலாவது நாய்கள் வளர்க்கப்பட்டு வரலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வளர்க்கும் நாய்களைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாய்களை வளர்ப்பவர்கள் மாநகராட்சி அலுவலகம் மூலமாக விண்ணப்பித்து உரிய உரிமம் பெற வேண்டும்.
வீட்டில் நாயை வளர்க்கவும், விற்பனை செய்யவும் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி கட்டாயமாக செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் நாய்களுக்கு தடுப்பூசி போடுதல் அவசியம். இந்த நடைமுறைகள் குறித்து நாய் வளர்ப்பவர்களுக்கு அறிவுறுத்தப்படும்.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதற்கான பணிகள் ஜூன் மாதத்தில் தொடங்கப்படும். மேலும் சொத்து வரி, குடிநீர் வரி ஆன்லைனில் செலுத்துவது போன்று வீட்டில் வளர்க்கும் நாய்கள் குறித்தும் ஆன்லைனில் பதிவு செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்தால் அவற்றை கண்காணிக்க மாநகராட்சி நிர்வாகத்திற்கு எளிதாக இருக்கும். இது குறித்தும் ஆலோசித்து அரசுக்கு கருத்து தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளோம்'' என்றார்.