சென்னை கொடுங்கையூரில் இரும்புத்திரை திரைப்பட பாணியில் வாடிக்கையாளர்களின் ஆதார் ஆவணங்களின் தகவல்களை வைத்து போலி ஆவணங்கள் தயாரித்து அதன்மூலம் வங்கிக்கடன் வாங்கி ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூரில் யுவராஜ் என்ற ஐ.டி ஊழியர் கொடுத்த புகாரில், தனது வாங்கி கணக்கிலிருந்து க்ரிடிட் கார்ட் மூலம் ஐபோன் வாங்கியதாக வங்கியிலிருந்து பணம் பிடிக்கப்பட்டதாகவும் ஆனால் என்னுடைய வங்கி கணக்கை வைத்து தான் எந்த வங்கி கடனும் வாங்கவில்லை என தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை விசாரித்த போலீசார் கொடுங்கையூரை சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பலை விசாரித்துவந்தனர். அந்த விசாரணையில் ப்ரௌசிங் சென்டருக்கு நகலெடுக்க வரும் வாடிக்கையாளர்களின் தவகவல்களை திருடி போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் அவர்பெயர்களில் கடன் பெற்று அதன்மூலம் வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கி குறைந்த விலையில் விற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த மோசடி செயலில் ஈடுபட்டுவந்த இந்த கும்பலை போலீசார் கைதுசெய்துள்ளனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட போலி கடன் அட்டைகள், ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ராஜேஷ், வினோத், மணிகண்டன், சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக இன்னும் சிலரை தேடிவருகின்றனர்.