தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், மதிப்பிற்குரிய திரு நெல் ஜெயராமன் அவர்கள் சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டு இன்று விடியற்காலை மறைந்திருக்கிறார். அவருடைய மறைவு ஒட்டுமொத்த விவசாய பெருங்குடி மக்களுக்கு ஒரு மிகப்பெரிய பேரிழப்பாக அமைந்திருக்கிறது. நெல் விவசாயத்தை பொருத்தவரையில் இயற்கை அடிப்படையிலே ஒரு புத்துணர்ச்சியை, ஒரு மறுமலர்ச்சி பெறுவதற்கு வழிவகுக்க பாடுபட்டவர் நெல் ஜெயராமன் அவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் நெல் கண்காட்சியை அவர் தொடர்ந்து நடத்தி இளைஞர்களுக்கு ஒரு விழிப்புணர்வை விவசாயத்தைப் பொறுத்தவரை ஏற்படுத்தினார். இப்படி வளர்ச்சிக்கு பாடுபட்டு தன் வாழ்நாள் முழுதும் பணியாற்றி இருக்கக்கூடிய நெல் ஜெயராமன்.

அவருடைய இழப்பு அவருடைய குடும்பத்தாருக்கும் மட்டுமல்ல ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் ஒரு மாபெரும் இழப்பாக அமைந்திருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.