ஈரோட்டில் ஸ்டாலின் குணசேகரன் தலைமையிலான மக்கள் சிந்தனை பேரவை அமைப்பு ஒவ்வொரு வருடமும் பாரதி விழா நடத்துகிறது. அதேபோல், இவ்வருடமும் 11ஆம் தேதி மாலை, பாரதி விழா நிகழ்ச்சி நடந்தது.
அதில் இசை மேதை எம்.பி.சீனிவாசன், உருவப்படத்தை திறந்து வைத்த சென்னை இளைஞர் இசைக்குழு கலைத்துறை இயக்குனர் டி.ராமசந்திரன் பேசும்போது, “இசைமேதை எம்.பி.சீனிவாசனுக்கு, பாரதியார் மீது இருந்த அதீத பக்தியால், அவரது பாடல்களைச் சேர்ந்திசைக் குழு மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தார். இக்குழு மூலம் நாடு, தேச பக்தி, மனித நேயம், மக்கள் சிந்தனை, சமூக நீதியைக் கொண்டு சேர்த்தார்.
பாரதி எழுதிய பாடல்களை, இசையமைத்து பாடும் முன், அவர் எழுதிய வரிகளை மனதில் உள்வாங்கி, அவர் என்ன மனநிலையில் எழுதினார் என்பதை நினைத்தே, இசை வடிவம் கொடுத்தார். அதனால்தான் இன்றும், பாரதியார் பாடல், அவரது இசை சேர்ப்பால் மக்களிடம் உணர்ச்சியுடன் பாடப்பட்டு வருகிறது. இக்குழு மூலம், மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிக் குழந்தைகளுக்கு சேர்ந்திசை பாடல்களை இசைக்கும் முறையைக் கற்றுத்தருகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும், இசையைக் கொண்டு சேர்த்து வருகிறோம்” என்றார்.
இந்த விழாவில், இசைக்கவி ரமணனுக்கு, ‘பாரதி விருதும்’, 25,000 ரூபாய் மதிப்பிலான பொற்கிழியும் வழங்கப்பட்டது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பொ.குழந்தைவேல் அதை வழங்கி பேசும்போது, “பாரதியைப் பல்வேறு கோணங்களில் உணர முடியும். அதில், அறிவியல் பார்வையில் பாரதியைப் பார்த்தால், பன்முகத்துடன் காணப்படுகிறார். நியூட்டன், ஐன்ஸ்டீன், கணித மேதை ராமானுஜம் போன்றோர், பல்வேறு சமன்பாட்டைக் கண்டறிந்தனர். இவர்கள் மிகப்பெரிய கல்வி, வாய்ப்புகளைப் பெற்றவர்கள் அல்ல. அவர்களது கண்டுபிடிப்பு பல காலம் விவாதிக்கப்பட்டாலும், இன்றுவரை, அதே நிலையில் கண்டுபிடிப்புகள் தொடர்கிறது.
அதுபோல, பாரதியார், அவ்வையார் போன்றோர் உலக அறிவை எவ்வாறு பெற்றார்கள் என்பது வியப்பானதாகவே உள்ளது. ஒரு அணுவைப் பிளந்து, ஏழு கடல் புகுத்தி, என அணுவை அறியாத காலத்தில் அவ்வையார் கூறியது வியப்பானதுதானே? அதுபோல, பாரதியும், குழந்தைகள் முதல் தேசப்பற்று உணர்வுகள் வரை பலவற்றைக் கூறியுள்ளார். அவை இன்றும் மாறாததாகவே காணப்படுகிறது.
விஞ்ஞானத்துக்கு, பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், பாரதியின் எண்ணம் எல்லையற்றது. அதனால்தான், இன்றைய நிலைகளை, அப்போதே உணர்ந்து, கவிதை பாடி, எல்லா காலத்துக்கும் ஏற்றதாக நிரூபித்துள்ளார்” என்றார்.