பாசனப் பகுதியில் தொடர்ந்து நீர் திருட்டு நடந்து கொண்டே இருக்கிறது. அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை என ஈரோடு மாவட்ட வேளாண் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் குற்றச்சாட்டு வைத்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேளாண் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இதற்கு மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு விவசாயிகள், விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக ஆட்சியரிடம் கொடுத்தார்கள். சிலர் பேசினார்கள்.
தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதி விவசாய சங்கத்தின் தலைவர் தளபதி என்பவர் பேசும்போது, "நீர் பாசன பகுதியில் தொடர்ந்து நீர் திருட்டு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளோம். நீதிமன்றமும் நீர் திருட்டு நடைபெறாமல் அதிகாரிகள் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து நீர் திருட்டு நடந்து கொண்டேதான் இருக்கிறது. பெரிய தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்கு தண்ணீரை திருடுகிறார்கள். அவர்களுக்கு அரசியல் செல்வாக்கு துணையாக இருக்கிறது. இந்த நீர் திருட்டால் எங்களது விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது, என்றார்.
தொடர்ந்து பேசிய இன்னொரு விவசாயி, " நாங்கள் விளைவித்து ஒரு வருடம் இரவு பகலாக உழைத்து கரும்பை விளைவித்து சர்க்கரை ஆலைகளுக்கு கொடுத்ததில் அந்த ஆலைகள் எங்களின் கரும்புக்கான நிலுவைத்தொகை 54 கோடி வைத்துள்ளது. எல்லாம் எங்களுக்கு வரவேண்டிய பணம். அந்தப் பணத்தை அரசும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு பெற்றுத் தர வேண்டும்." என்றார்.
மற்றொருவர், "கூட்டுறவுசங்கங்களில் விதை நெல் இருப்பு போதிய அளவுக்கு இல்லை. இதனால் நாங்கள் தனியாரை நாட வேண்டியுள்ளது. தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். அதே போல் இயற்கை விவசாயம் சம்பந்தமான தகவல்களை வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்" என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய ஆட்சிர் கதிரவன் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.