ஒவ்வொருவர் உடம்பிலும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதுதான் கரோனாவிலிருந்து மீளும் வழி. அம்மா உணவகங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உணவை இலவசமாக வழங்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை இல்லை என்பதை உலகமே அறியும். மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கு எவ்வளவு காலமாகும் என்பதை யாரும் அறியோம். கரோனா பாதிப்பு கட்டுக்குள் வருமா என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை. எப்போது ஊரடங்கு முடியும் என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை.

கரோனாவை எதிர் கொள்ளக்கூடிய எதிர்ப்பு சக்தியை உடம்பில் உருவாக்காமல் தைரியமாக வெளியே உலவ முடியாது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை இல்லாமல் இருந்த போதும் உலக முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் விகிதாசாரம் அதிகமாக இருக்கிறது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
அது எப்படிச் சாத்தியம். கரோனா தொற்றுக்கு மருந்தே இல்லை என்னும் சூழ்நிலையில் மருத்துவர்கள் எப்படிச் சிகிச்சை அளிக்க முடியும். மருந்தே கொடுக்காமல் கரோனா தொற்றிலிருந்து எப்படிக் காப்பாற்ற முடியும். கரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றவர்கள் சரியான சிகிச்சையே இல்லாமல் குணமடைகிறார்கள் என்பது எதார்த்தம். யார் யாருக்கெல்லாம் உடம்பில் எதிர்ப்பு சக்தி இருக்கிறதோ அவர்கள் குணமாகிறார்கள். மருத்துவ முறைகளால் அல்ல.

இதிலிருந்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்வது உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்துவது தான் ஒரே தீர்வு. அதற்கான உணவு முறைகள் மருத்துவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த உணவை உட்கொண்டு வாழ்க்கைமுறையை கடைப்பிடித்தால் தான் உடம்பில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
ஊரடங்கு முடிந்து மக்கள் வெளியே வரும்போது முடிந்த அளவு எதிர்ப்பு சக்தியோடு வந்தால் தான் கரோனாவை எதிர்த்துப் போராட முடியும். அதற்கான முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் இதுவரை முன்னெடுக்கவில்லை. அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களும் உருவாக்கப்படவில்லை. உலகில் நோய்த்தொற்று பரவ ஆரம்பித்து 5 மாதங்களை நெருங்குகிறோம். இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 30 நாட்களை நெருங்குகிறோம். வீட்டில் இருக்க வேண்டும், தனியாக இருக்க வேண்டும், விளக்கு ஏற்ற வேண்டும் என்று சொல்லுகின்ற அரசுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தவில்லை.
உலகமே சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இயற்கையாகவே அவர்களின் உணவு முறையினால் கரோனாவை எதிர்க்கக்கூடிய எதிர்ப்பு சக்தி உடம்பில் இருக்கிறது என்று. இன்னும் ஒவ்வொரு மனிதனுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு அரசாங்கங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நோயைப் பற்றிய தீவிரத்தையும், பயத்தையும் உணர்த்துகின்ற பிரதமர் மற்றும் முதலமைச்சருடைய பேச்சுகள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றி எதையும் முன்னெடுக்காதது வியப்பளிக்கிறது.
அரசாங்கமாக இருந்தாலும், தன்னார்வலர்களாக இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்ற உணவை மக்களுக்குக் கொடுக்க வேண்டும். அம்மா உணவகங்களில் வழங்கப்படுகின்ற உணவைச் சாப்பிடுகின்ற மக்களுடைய உடம்பில் கரோனா வைரஸை மட்டுமல்ல எதிர்காலத்தில் எந்த வைரஸ் வந்தாலும் எதிர்க்கின்ற சக்தியை உருவாக்க வேண்டும். கரோனா தொற்றுக்கான மருந்தைக் கண்டுபிடித்தாலும் மறுபடியும் இதேபோன்று வேறொரு பெயரில் கிருமிகள் வராது என்பது என்ன நிச்சயம்.
எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்ற உணவை உட்கொள்ள மக்களை வற்புறுத்துவது இப்போதைய சூழ்நிலைக்கு மட்டுமல்ல எது வந்தாலும் எதிர்காலத்தில் காப்பாற்றுவதற்காகத் தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும் இதைப்பற்றி பேசலாம். ஆனால் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக பிரச்சாரங்களை மேற்கொண்டால் தான் மக்களிடத்தில் சரியான முறையில் போய் சேரும். வீட்டிலே தனிமைப்படுத்தி இருப்பது மட்டும் நோயிலிருந்து நம்மைக் காப்பாற்றாது. ஊரடங்கு தளர்ந்து அவரவர் பணிகளைச் செய்வதற்கு சாலையில் இறங்குவதற்கு முன்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.