எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனால் எடப்பாடி தரப்பு உற்சாகமாக உள்ளது. இருப்பினும் நேற்று முன்தினம் ஓபிஎஸ் நடத்திய மாநாடு கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் எங்களுக்கு பொருட்டல்ல மேலே இருக்கக்கூடிய தேசிய தலைமையுடன் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற கருத்தை எடப்பாடி பழனிசாமி அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல் சில நாட்களுக்கு முன் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்ட ஆளுநர் மூன்று நாள் பயணமாக சென்றுள்ள நிலையில் நாளை மறுநாள் சென்னை திரும்ப உள்ளார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் இன்று மாலை டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.