எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நூற்றுக்கு நான்கு அல்லது ஐந்து பேர்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நாமக்கல்லில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வந்திருந்தார். கமலாபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
’’காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையமும், நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் சார்பில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகா மட்டும் தங்கள் தரப்பு பிரதிநிதிகளை அறிவிக்காமல் இருந்தது. அதனால் மத்திய அரசாங்கமே, தாமாக முன்வந்து அதற்கான உறுப்பினர்களை நியமித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையமானது, பத்து நாள்களுக்கு ஒருமுறை நீர்ப்பங்கீட்டினை கண்காணித்து வரும். எனவே தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்கும்.
எட்டு வழிச்சாலையைப் பொறுத்தவரை, வாகனப் பெருக்கத்தினாலும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு திட்டம். இத்திட்டத்திற்காக தர்மபுரியில் 56 கி.மீ. தூரமும், சேலத்தில் 30 கி.மீ. தூரமும் எல்லை நிர்ணயம் செய்து கல் நடப்பட்டு உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியுள்ளனர். நூற்றுக்கு நான்கு அல்லது ஐந்து பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
பசுமை வழிச்சாலை மிக முக்கியமான சாலைத் திட்டம். கட்டாயம் தேவை. கடந்த 2006ம் ஆண்டு கிருஷ்ணகிரி, உளுந்தூர்பேட்டை, மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டபோது 1.07 கோடி வாகனங்கள் இருந்தன. இப்போது, வாகனங்களின் எண்ணிக்கை 2.57 கோடியாக அதிகரித்துள்ளது. அதற்கேற்ப சாலைகளை உருவாக்குவது அரசின் தலையாய கடமை.
திமுக ஆட்சியின்போது வழங்கப்பட்ட இழப்பீட்டை விட, இப்போது அதிகளவில் இழப்பீடு வழங்கப்படுகிறது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இழப்பீடு குறித்து, அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். பலன் தரும் மரங்கள், ஓட்டு வீடுகள் தேய்மானத்தையும் கணக்கிட்டு இழப்பீடு வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு தேவையான நிலம் கொடுத்து பசுமை வீடுகளும் கட்டித் தருகிறோம்.
நாமக்கல் மாவட்டத்தில் திமுகவினர் ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு, வேறு ஒரு இடத்தில் போராட்டம் நடத்தி, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தியதால்தான் கைது செய்யப்பட்டனர்.
வளர்ச்சித் திட்டங்களை ஆளுநர் பார்வையிடுவது ஆக்கப்பூர்வமான ஒன்று. யாரும் தடுக்க முடியாது. ஜனநாயக நாட்டில் யாரையும் வரக்கூடாது என்று சொல்லக்கூடாது.
சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு தளவாட தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் வர உள்ள நிலையில், விமான நிலையம் விரிவாக்கம் தவிர்க்க முடியாது. இது தொடர்பாக பொதுமக்களிடம் 20 முறை கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது.
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகிறோம். 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சிப்பது சரியில்லை. நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. அது, தவிர்க்கப்பட வேண்டியது. ’’