இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சீனியர் தலைவரான நல்லகண்ணு குடியிருந்த வீட்டை, எடப்பாடி அரசு அதிரடியாகக் காலி செய்ய வைத்த விவகாரம் தமிழக அரசியலில் நல்லவங்களுக்கு இதுதான் நிலைமையான்னு அணைத்து தரப்பு மக்களையும் கோபப்பட வைத்துள்ளது. மூத்த தோழர் நல்லகண்ணு 94 வயதைக் கடந்திருக்கும் சீனியர் தலைவர். முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரரான அவர், நேர்மைக்கும் தூய்மைக்கும் உதாரணமா வாழ்ந்துக்கிட்டு இருக்கார். அவரை காலி செய்யச் சொன்னா யார்தான் ஏத்துக்குவாங்க என்று பெரும் கேள்வியையும்,விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சொந்த வீடுகூட இல்லாத எளிமையான தலைவரான நல்லகண்ணுவுக்கு 2007 தி.மு.க. ஆட்சியில் தியாகராய நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாடகை வீடு ஒதுக்கித்தந்தார் கலைஞர். குறைந்த வாடகை கொண்ட அந்த குடியிருப்பில்தான் முன்னாள் அமைச்சர் கக்கன் வாரிசுகளும் இன்னொரு வீட்டில் இருக்காங்க. குடியிருப்பு பழசாயிட்டதால, புதுசா கட்டணும்ங்கிற திட்டத்தின்படி, நல்லகண்ணு-கக்கன் குடும்பத்தினர் உள்பட எல்லோரையும் காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியது வீ.வ.வாரியம். பலரும் கோர்ட் வரைக்கும் போய் எதுவும் நடக்கலை. நல்லகண்ணு அய்யாவோ எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், அரசு நோட்டீஸை மதிச்சி, வீட்டைக் காலி பண்ணிட்டாரு.
இது தெரிஞ்சதும் தி.முக. தலைவர் ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் தோழர் நல்லகண்ணுவுக்கு வீடு ஒதுக்கணும்னு அறிக்கை விட்டாங்க. துணை முதல்வர் ஓ.பி.எஸ்சும் நல்லகண்ணு அய்யாகிட்ட போனில் பேச, அவருக்கும் கக்கன் வாரிசுகளுக்கும் மாற்று வீடு ஒதுக்கப்படும்னு அரசாங்கம் அறிவிச்சிருக்கு. அரசுக் குடியிருப்பைக் காலிசெய்யச் சொல்லும் போது அங்கே யார் யார் குடியிருக்காங்கன்னு தெரிஞ்சிக்க வேணாமா? அரசாங்க அதிகாரிகள் எந்திரம் போல செயல்படுறாங்கனு பல்வேறு தரப்பும் கூறிவருகின்றனர்.