சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23 வயது) கனடா செல்வதற்காக நேற்று தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, சென்னை பள்ளிக்கரணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ, பைக்கில் வலதுப்புறம் திரும்ப முயன்ற போது, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள். பின்னர், அந்த விசாரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தனது இல்லத்திருமணத்துக்காக, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த திருமணத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு சீல் வைத்தது மாநகராட்சி அதிகாரிகள். இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அடுக்கடுக்காக கேள்விகளின் மூலம் கண்டனத்தை தெரிவித்தது. பின்னர், திமுக, அமமுக போன்ற கட்சி தலைமையிலிருந்து தொண்டர்கள் யாரும் பேனர், கட்டவுட் வைக்க கூடாது என்று அறிக்கை வெளியிட்டனர்.
இவர்களை தொடர்ந்து அதிமுகவும் கட்சி தொண்டர்கள் யாரும் பேனர் அல்லது கட்டவுட் வைக்க கூடது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “அதிமுக தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகத் தொண்டாற்றுவதற்காகவே தோன்றிய மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் மனம் அறிந்து, தேவையை உணர்ந்து மக்களுக்காகப் பணியாற்றுவது தான் அதிமுக தொண்டர்களின் தலையாயக் கடமையாக இருந்திடல் வேண்டும்.
இந்தக் கருத்தினை கட்டளையாகவும், வேண்டுகோளாகவும், பல நேரங்களில் அதிமுக தொண்டர்களுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவூட்டி வந்திருக்கின்றார். ஜெயலலிதா வழியில் அரசியல் பணியாற்றி வரும் நாங்களும் இந்த வேண்டுகோளை ஏற்று தொண்டர்களிடம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளோம்.
அதிமுக கட்சி நிகழ்ச்சிகளுக்கோ, அதிமுகவினர் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கோ வரவேற்பு என்ற பெயரிலும், விளம்பரம் என்ற முறையிலும், மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைப்பதை அன்புகூர்ந்து நிறுத்திவிட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் அதிமுகவினர் ஈடுபடவே கூடாது. ஒருசிலர் ஆர்வம் மிகுதியாலும் , விளைவுகளை அறியாமலும், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை அறியாமலும் செய்கின்ற சில செயல்களால், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற செய்தி வரும்போது நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம்.
எனவே, எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்அவுட்டுகள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதனைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்" என்று வலியுறுத்தியுள்ளனர்.