Skip to main content

மணல் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது! -இனி முன்ஜாமீன் கிடையாதென 40 மனுக்கள் தள்ளுபடி!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

An environment where sand Theft is out of control! -40 petitions dismissed as no more pre-bail!

 

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமீன் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்கள் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 40 மனுக்கள், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகமது ரியாஸ் முன்ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்தார். 

அப்போது நீதிபதி, நாட்டையே ஊரடங்கு முடக்கி போட்டிருந்தாலும் மணல் கடத்தல்காரர்களை மட்டும் இந்த ஊரடங்கு பாதிக்கவில்லை. இத்தகையவர்களால் நிலத்தடி நீர் ஆதாரங்களும் சுற்றுச்சூழலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரை நீதிமன்றத்திற்கு வந்த மணல் கடத்தல் தொடர்பான முன்ஜாமின் வழக்குகளில் கடுமையான நிபந்தனைகள் மற்றும் அபராதம் விதித்து முன்ஜாமீன் வழங்கிய போதும், நீதிமன்றத்திற்கு வரும் முன்ஜாமீன் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.  தினந்தோறும் குறைந்தது மணல் கடத்தல் தொடர்பான  15 முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன. 

மணல் கடத்தலைத் தடுக்க நீதிமன்றங்கள் கடுமையான பல உத்தரவுகளை பிறப்பித்தும், அதைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. எப்படியாயினும் முன்ஜாமீன் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில், தொடர்ந்து அத்தகையவர்கள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். முன்ஜாமின் வழங்கப்படும்போது விதிக்கப்படும் அபராதங்களை தொழில் செலவாகவே அவர்கள் கருதத் தொடங்கி விட்டனர். 

கனிமங்கள், மணல், காடுகள் எனச் சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அதனைக் கொண்டு செல்ல வேண்டியது, ஒவ்வொரு குடிமகனின் கடமை. உயர் நீதிமன்றம் இது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தாலும், அதனை அரசு மற்றும் அதிகாரிகள் உரிய முறையில் அமல்படுத்தாத சூழல் உள்ளது. கடத்தல்காரர்களுக்கு முன்ஜாமீன் கிடைக்கும் வரை காவல் துறையினரும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை.  

 

Ad


சுற்றுச்சூழலைப் பேணிக் காக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இனி மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளில் முன்ஜாமீன் கோருபவர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து, 40 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்