சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அம்மோனியா திரவம் மூலப்பொருளாகத் தொழிற்சாலையின் வளாகத்தில் சேமிப்புத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் அம்மோனியா திரவம் அவ்வப்போது வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, எண்ணூரில் அமைந்துள்ள சிறு துறைமுகத்திலிருந்து உரிய குழாய்கள் மூலமாக இந்தத் தொழிற்சாலையில் உள்ள சேமிப்புத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று (26.12.2023) நள்ளிரவு 11:45 மணியளவில் இந்தத் தொழிற்சாலையில் உள்ள குழாய்களில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவினால், தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. வாயுக் கசிவினைக் கண்டறிந்தவுடன், தகுந்த நிபுணர்கள் உடனே வரவழைக்கப்பட்டு, 20 நிமிடங்களில் அந்தத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து போதுமான ஆம்புலன்ஸ்களை உடனடியாக ஏற்பாடு செய்து, நிலைமை சரிசெய்யப்பட்டது.
இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 52 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். இதனிடையே, வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் தொழிற்சாலையை தற்காலிமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளிட்டுள்ள அறிவிப்பில், ‘எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உர தொழிற்சாலையை தற்காலிமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தது.
அதேசமயம் கோரமண்டல் தொழிற்சாலையை எதிர்த்து தொழிற்சாலை முன்பு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கோரமண்டல் தொழிற்சாலை செயல்படத் தடை விதித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கோரமண்டல் தொழிற்சாலையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனையடுத்து எண்ணூரில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையை எதிர்த்த அப்பகுதி மக்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.