விவசாயம் தான் இந்திய மக்களின் உயிர்நாடி. அதனால் தான் இந்திய திருநாட்டின் முதுகெலும்பு விவசாயம் என கூறப்படுகிறது. போதிய மழை இல்லாததால், மண் வளமும் குறைந்து விட்டதால் இயற்கை விவசாயம் என்ற சொல் மங்கி செயற்கை விவசாயம் அதிகரித்தது. நஞ்செனும் உரமின்றி விவசாயமே இல்லையென்றாகி விட்டது.
இந்நிலையில் உரத்தை தவிர்த்து நஞ்சில்லா உணவே சிறந்தது என்பதை உணர்த்தும் வகையில் இயற்கை முறையிலான விவசாயத்தை ஊக்குவித்து கற்றுக் கொடுத்து வருகிறார் ஓர் ஆங்கிலேயர்.
புதுச்சேரி ஆரோவில் சர்வதேச பகுதியில் வசிப்பவர் இங்கிலாந்து போர்ஸ்ட் மவுத் பகுதியை சார்ந்த டங்கன் மைக்கென்சி. இவர் இங்கிலாந்தில் உள்ள பள்ளியில் படிக்கும் போதே விவசாயம் குறித்தான ஆர்வம் அதிகமானதால் ஆரோவில் வந்தபோது இங்கிருந்த விவசாயம் முறைகளை கற்றுக்கொள்ள ஆர்வமடைந்தார்.
தனது 19 வயதில் இங்கே வந்த அவர் கடந்த 26 வருடமாக தனக்காக ஒதுக்கப்பட்ட 6 ஏக்கரில் உழவு செய்யாமல் இயற்கை முறைகளை கொண்டு தமிழர்களின் பாரம்பரிய விளைபொருட்களை விளைவித்து விற்று வந்துள்ளார்.தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் ஆன்மீகத்தால் தனது பெயரை கிருஷ்ணா என்று மாற்றிக்கொண்டு இயற்கை விளைபொருட்கள் விற்பனை குறையவே 2006 ஆம் ஆண்டு இயற்கை உணவகம் மற்றும் அங்காடியை திறந்துள்ளார்.
அன்றிலிருந்து தன்னுடைய விவசாய நிலத்தில் வளரும் கீரைகள், காய்கறிகள், பழங்களை கொண்டு உணவு தயாரித்து விற்பனை செய்து வருகின்றார்.தமிழர்களின் பாரம்பரிய கீரை வகைகளான முடக்கத்தான் கீரை, கீழாநெல்லி, பொன்னாங்கன்னி, திப்பிலி, பாலா போன்ற கீரைகள், வெண்டைக்காய், பப்பாளி, வாழை, முருங்கை காய், சுரைக்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கனிகள், எலுமிச்சை, மிளகாய் உள்ளிட்டவைகளும் மரவள்ளி கிழங்கு, கருணை கிழங்கு, பனை கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும், மா , சப்போட்டா, வாழை , பப்பாளி உள்ளிட்ட 140 வகையான இயற்கை வழி உணவு பொருட்களும் விளைவிக்கின்றார்.
இதில் உழவு இயந்திரம் இல்லாமல் இயற்கை முறையில் மண்ணை வளப்படுத்தி கீரை, காய்கறிகள், பழங்களின் கழிவுகளை இயற்கை உரமாக கொண்டு விளைவிக்கப்பட்டவைகளை கொண்டு இயற்கை உணவகம் நடத்துகின்றார்.
மேலும் இந்த உணவகத்தில் பூ, பழங்களை கொண்டு இயற்கை பானமும் ( ஜூஸ்), காய்கறிகளை கொண்டு சாலட்டும், சாமை, ஆரியம் (கேழ்வரகு) கொண்டு சிற்றுண்டியும், கிழங்குகளை கொண்டு சிப்ஸ் -களையும் தயாரிக்கிறார்.
இயற்கை வழி உணவுகள் மூலம் பழந்தமிழரின் உணவு கலாசாரத்தை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகின்றார் இந்த இங்கிலாந்து கிருஷ்ணா.