கரூர் ராமேஸ்வரப்பட்டியில்உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (பிப்.8) காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர்.
பைபாஸ் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு, சென்னை புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே நிராகரித்து தள்ளுபடி செய்தது. இதையடுத்து, 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த ஜனவரி 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். வழக்கு விசாரணையின்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “குற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த 230 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார்? இதன்மூலம் மக்களுக்கு தமிழக அரசு என்ன சொல்ல வருகிறது” எனக் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கரூர் ராமேஸ்வரப்பட்டியில்உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீட்டில் தற்போது செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசித்து வருகின்றனர். கேரள பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.