சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆறு பேர் சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகி இருந்தது. எம்.எல்.ஏ. விடுதி நிர்வாகத்திடம் வைத்திலிங்கம் தங்கியிருந்த அறையின் சாவியை வாங்கி அவரது அறையைத் திறந்து சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் தற்பொழுது தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஒ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.
தற்போது ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள வைத்திலிங்கம் அமைச்சராக இருந்த பொழுது பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்திற்குச் சொந்தமான 'ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் அண்ட் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்' என்ற நிறுவனம் 57 ஏக்கர் நிலத்தில் 24 பிளாட்டுகளாக 1400க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட குடியிருப்புகள் கட்டுவதற்குத் திட்டமிட்டார்கள். அப்பொழுது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அனுமதி வழங்காத நிலையில், வைத்திலிங்கம் பணம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கினார் என்ற குற்றச்சாட்டு இருந்தது.
அந்த குற்றச்சாட்டு அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இதனையடுத்து அந்த வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்யும் வழக்குகளில் உள்ள விவரங்களை வைத்து அமலாக்கத்துறை தாமாக முன்வந்து வழக்குகளைப் பதிவு செய்யும். அதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறதா அல்லது வெளிநாட்டில் ஏதேனும் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருக்கிறதா என்ற முகாந்திரத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்வார்கள். அப்படி அதனடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ. (CMDA - Chennai Metropolitan Development Authority)அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுமான நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது தொடர்பாக ஆவணங்கள் குறித்து தகவல்களைத் திரட்ட அமலாக்கத்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.