முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு ரூ. 908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகக் கூறி அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் மற்றும் அவருக்குத் தொடர்புடைய நிறுவனத்திடம் அமலாக்கத்துறை அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் விசாரணை நடத்தியது.
இதனையடுத்து ஃபெமா சட்டப்பிரிவு பிரிவு 37 ஏ-யின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட ரூ.89.19 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும் கடந்த 26ஆம் தேதி (26.08.2024) நிறைவேற்றப்பட்ட தீர்ப்பின்படி தோராயமாக ரூ. 908 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.