Skip to main content

காட்டுமிராண்டி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி! தீர்ப்பளித்த நீதிபதியை பாராட்டுகிறோம்! திருமா

Published on 13/12/2017 | Edited on 13/12/2017

காட்டுமிராண்டி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி! 
தீர்ப்பளித்த நீதிபதியை பாராட்டுகிறோம்! திருமா

சங்கர் படுகொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தீர்ப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அறிக்கை:



’’கடந்த 2016 மார்ச் 13 அன்று உடுமலைபேட்டை சங்கர் கூலிப்படையினரால் மிகக்கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சங்கரும் கவுசல்யாவும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் கவுசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூலிக்கும்பலை வைத்து ஈவிரக்கமின்றி இந்த படுகொலையை செய்தனர்.

 கூலிக்கும்பலின் கொடூரத் தாக்குதலில் படுகாயமுற்ற கவுசல்யா உயிர் தப்பினார். திருப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த சங்கர் கொலை வழக்கில் இன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆணவக் கொலைகள் செய்யும் கும்பலுக்கும் கூலிக்கு கொலை செய்யும் கும்பலுக்கும் இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமையும். தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் சாதி வெறியர்களுக்கும் மதவெறியர்களுக்கும் பாடம் புகட்டும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த காட்டுமிராண்டி கலாச்சாரத்தை எதிர்த்து துணிந்து போராடிய கவுசல்யாவுக்கு இத்தீர்ப்பு மிகப்பெருமளவில் ஆறுதல் அளிக்கும். கவுசல்யாவுக்கு மட்டுமின்றி மனிதநேயமுள்ள ஒவ்வொருவருக்கும் இத்தீர்ப்பு ஆறுதல் அளிப்பதுடன் நீதித்துறையின் மீது நம்பிக்கையை அளிக்கும். இத்தீர்ப்பை வழங்கிய நீதியரசர் அலமேலு நடராஜன் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நெஞ்சாரப் பாராட்டுகிறது.

பொதுவாக மேல்முறையீடு செய்யும்போது உயர்நீதிமன்றத்தில் இதுபோன்ற தீர்ப்புகளுக்கு எதிராக தீர்ப்பளிப்பது நடைமுறையாக இருந்து வருகிறது. எனவே, மேல்முறையீட்டு வழக்கிலும் அரசு தரப்பில் உறுதியாக நின்று வழக்காடி இத்தீர்ப்பை தக்கவைத்து நீதியைக் காப்பாற்ற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. அத்துடன் கவுசல்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் அரசு வேலை வழங்க வேண்டுமெனவும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. மேலும் மைய மாநில அரசுகள் ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.’’

சார்ந்த செய்திகள்