திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே இருக்கும் அம்மையநாயக்கனூரில் மக்களை தேடி சென்று மருத்துவம் திட்டத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவிற்கு பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் தலைமை வகித்தார், மாவட்ட ஆட்சியர் விசாகன் முன்னிலை வகித்தார். விழாவில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரி யசாமியோ, “மக்களை தேடி சென்று மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை தமிழக முதல்வர் தமிழக மக்களுக்கு அளித்துள்ளார்.
இத் திட்டத்தால் கோடிக்கணக்கான மக்களின் உடல்நலம் பாதுகாக்கப்பட உள்ளது. இவ்வாறு வீடு தேடிச் சென்று மருத்துவம் வழங்கப்படுகிறதோ அவ்வாறு வீடு தேடி சென்று வேலை வாய்ப்பு வழங்கப்படும். கூட்டுறவுத் துறையில் உள்ள நான்காயிரம் காலியிடங்கள் வெளிப்படைத் தன்மையோடு விரைவில் நிரப்பப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். கூட்டுறவு கடன் சங்கங்களில் அனைவரும் உறுப்பினராக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தேவைக்கேற்ப கடன் வழங்கப்படும்” என்று கூறினார்.
அதன் பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு வீடாக சென்று மருத்துவ பெட்டியை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செளந்திரபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகாலப்பாண்டியன், நகர செயலா ளர்கள் செல்வராஜ், கதிரேசன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.