சிதம்பரம் அருகே பூதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மூவேந்தன். இவரது வயலில் விளைந்த 450 நெல் மூட்டைகளை விற்பனைக்காக பூதங்குடியில் உள்ள தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தற்காலிக ஊழியர்களான ரமேஷ் மற்றும் பாலச்சந்திரன் மூட்டைக்கு ரூ 55 என ரூ 22 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே நெல் மூட்டைகளை எடைபோட முடியும் என்று கூறியுள்ளார்கள்.
பின்னர் மூவேந்தன் இதுகுறித்து நெல்கொள்முதல் நிலைய மண்டல மேலாளர் விஸ்வநாதனிடம் புகார் செய்ததை அடுத்து மேலாளர் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் பாலசந்தர் நெல் மூட்டைகளை எடை போடாமல் தாமதப்படுத்தியும் எடைபோடும் போது மின் இணைப்பை துண்டித்தும் மூவேந்தனிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதனால் மூவேந்தன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் ஒரத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேளாண் துறை அமைச்சர் சொந்த ஊரில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வருத்தத்திற்கு உரியது என விவசாயிகள் மத்தியில் பேசப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.