தியாகி இமானுவேல் சேகரனின் 66 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சமூகப் பங்களிப்பினைப் போற்றும் வகையில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதே சமயம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்ப்பன், பெரிய கருப்பன், மூர்த்தி, கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) தளப் பதிவில், “ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில், அவரது போராட்ட வாழ்வையும் சமூகப் பங்களிப்பையும் நினைவு கூர்ந்து போற்றுகிறேன். பொதுமக்கள் மற்றும் தியாகி இமானுவேல் சேகரனாரின் வழித்தோன்றல்களின் கோரிக்கையின்படி, அன்னாரின் நூற்றாண்டையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இமானுவேல் சேகரனுக்கு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புக்கு, இமானுவேல் சேகரன் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி, அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். முதல்வரின் அறிவிப்பு குறித்து சூரிய சுந்தரி பிரபா ராணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வரின் அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமான அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இமானுவேல் சேகரனின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.