நிறுவனங்களும், தனிமனிதர்களும் வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கான இ.எம்.ஐ. செலுத்தும் அவகாசத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா நோய்ப் பரவலினால் வங்கிகளில் மக்கள் வாங்கிய கடன்களுக்கான இ.எம்.ஐ. செலுத்த 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் ஆகஸ்ட் மாதத்தோடு முடிவடைய இருக்கிறது. கரோனா நோய்த் தொற்றினால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து போராடி கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் ஊரடங்கு உத்தரவு முழுமையாக ரத்து செய்யப்படாமல் இருப்பதால் தொழில்கள் அனைத்தும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. பெரும்பாலான தொழிற்சாலைகள் இன்னும் திறக்கப்படாமலே இருக்கிறது. பொதுப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் சொந்த ஊருக்குச் சென்றவர்கள் வேலைக்கு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். பல தொழிற்சாலைகள் வேலையாட்களைக் குறைத்திருக்கிறார்கள். இதனால் பல லட்சக்கணக்கான பேர் வேலை இழந்து குடும்பத்தை நடத்த முடியாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொழில் நிறுவனங்களும், தனிமனிதர்களும் இ.எம்.ஐ. செலுத்த மேலும் 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மக்கள் கைகளில் பணம் இல்லாத போது வாங்கிய கடனை எப்படிச் செலுத்த முடியும். நிறுவனங்களும் சரிவர இயங்காத போது கடனுக்கான இ.எம்.ஐ. தொகையை எப்படிக் கட்ட முடியும்.
இந்த நிலையில் அழுத்தம் கொடுத்தால் பெரும்பாலான கடன்கள் வாரா கடன்களாக மாறி போகும் சூழலே உருவாகும். அனைத்துத் துறைகளுமே பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. கரோனா நோய்த் தொற்று குறைந்து முழுமையாக ஊரடங்கை விலக்கினால் மட்டுமே பணப்புழக்கம் அதிகரிக்கும். இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கான இ.எம்.ஐ.யை மக்களால் செலுத்த முடியாது.
வங்கிகள் நெருக்கடி கொடுக்கும் பட்சத்தில் பல தற்கொலைகள் நிகழும். எனவே கடன்களுக்கான இ.எம்.ஐ. செலுத்தும் அவகாசத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.