தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புதிய புயல் சின்னமாக உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக வலுப்பெற்றபின் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகளில் வரும் 8 ஆம் தேதி காலை கரையை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக 7ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாளான 8ஆம் தேதி தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த மாண்டஸ் எனவும் பெயரிடப்பட உள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்திலிருந்து 10 மாவட்டங்களுக்கு மீட்புக்குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். (திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருவாரூர்)
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் இறையன்பு உடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் ஆலோசனை மேற்கொண்டார்.