
கருமுட்டை விற்பனை தொடர்பான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மீண்டும் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையைத் தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் 16 வயது சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை, இடைத்தரகர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் சிறுமியின் வயதைக் குறைத்துக் காட்டிய ஜான் என்ற நபரும் கைது செய்யப்பட்டார்.

சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்புத் தந்தையிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறுமியின் தாய் அவரது மகளுக்கு 3 வயது இருக்கும் போதே கணவனைப் பிரிந்து சையத் அலி என்ற பெயிண்டர் உடன் வாழ்ந்து வந்துள்ளார். சிறுமி 12 வயதில் பருவமடைந்த உடனே கருமுட்டை விற்பனைக்குப் பயன்படுத்தியுள்ளார். வளர்ப்புத் தந்தை சையத் அலி சிறுமியின் தாய் துணையுடன் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதும், கருமுட்டையை விற்பனை செய்ய உதவியதும் தெரிய வந்தது. இப்படிப் பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையைத் தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்வதை இவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு கருமுட்டை விற்பனையின் பொழுதும் 20 ஆயிரம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இடைத்தரகராகச் செயல்படும் மாலதிக்கு 5,000 ரூபாய் கொடுத்துள்ளனர். கருமுட்டையைக் கொடுத்து பணம் பெற ஏதுவாக சிறுமியின் வயதை 20 எனக் காட்ட, போலி ஆதாரத்தையும் உருவாக்கியுள்ளனர். இப்படி 8 முறை கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில மருத்துவமனைகளிலும் சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்டிருக்கலாம் என விசாரணை வெளி மாநிலங்களுக்கும் நீண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நான்கு பேர் சிறையில் உள்ள நிலையில், நாளை இந்த வழக்கானது ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் ஈரோட்டில் உள்ள குழந்தைகள் நலக் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமி கழிவறையை சுத்தம் செய்யும் கிருமிநாசினியைக் குடித்து தற்கொலை முயன்றுள்ளார். தற்பொழுது சிறுமி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.