தமிழக சட்டமன்றத் தேர்தலை மே மாதம் முதல் வாரத்தில் நடத்தி முடிக்க தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கேற்ப தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப்ரவரி 20ஆம் தேதி தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார் தலைமைத் தேர்தல் ஆணையர்.
இந்த நிலையில், புதிய வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்கிறது. வாக்காளர் பட்டியலில் இடம்பெற புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு இது கிடைக்கும்.
புதிய வாக்காளர்கள் தங்களது செல்ஃபோன் எண்ணை விண்ணப்பத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள, செல்ஃபோன் எண்ணை பதிவு செய்த பழைய வாக்காளர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த மின்னணு அட்டையில் வாக்காளரின் பெயர், வரிசை எண், பாகம் எண், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அடங்கியிருக்கும் என்றும், ‘கியூ ஆர் கோடு’ பயன்பாட்டைக் கொண்டதாகவும் அடையாள அட்டை இருக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள்.