நாமக்கல் அருகே, எலக்ட்ரீஷியனை நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால்நத்தம் ஈஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகன் தேவராஜன் (32) எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்திருக்கிறார். இவருடைய மனைவி காயத்ரி என்கிற சரண்யா (28). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
தேவராஜன், கடந்த 20ம் தேதி தனது உதவியாளரான ராஜி (60) என்பவருடன் வேலைக்குச் சென்றுள்ளார். அன்று இரவு 7 மணியளவில் எட்டிமடை புதூரிலிருந்து அப்பூர்பாளையம் சாலையில் அன்னாயம்மன் நகரில், ஒரு மர்ம கும்பல் இவர்களின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து தாக்கியுள்ளது. அப்போது தேவராஜனின் தந்தையை செல்போனில் தொடர்பு கொண்ட ராஜி, எட்டிமடை அப்பூர்பாளையம் சாலையில் ஜெகதாம்பாள் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் தேவராஜனை நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்குவதாகக் கூறியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த அவருடைய தந்தை, உறவினர்கள் சிலருடன் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது சிறிது தூரத்தில் தேவராஜன் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டும், உடல் முழுக்க கத்தியால் குத்தப்பட்டும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து திருச்செங்கோடு காவல்நிலைய ஆய்வாளர் பாரதிமோகன் மற்றும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சடலம், உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேவராஜனின் உடலில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன. கொலையை வேறு ஒரு இடத்தில் செய்துவிட்டு, காலி நிலத்தில் சடலத்தை வீசிச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர்.
எனினும், கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பெண் விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டாரா? கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதமா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. கொல்லப்பட்ட தேவராஜனின் செல்போனில் இருந்து அடிக்கடி பேசப்பட்ட எண்களை சேகரித்தும் காவல்துறையினர் அறிவியல் பூர்வமான விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.