தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மிக நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளான நிலையில் துணை மின்நிலைய ஊழியர் மின்சாரத்தை நிறுத்திவிட்டு மதுபோதையில் உறங்கி கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது பழனியப்பபுரம். இந்த பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து சுமார் 25 கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் நடக்கிறது. இந்நிலையில் திடீரென அந்த பகுதியில் சுமார் இரவு 10 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டது. பொதுமக்களும் சிறிது நேரத்தில் மின் விநியோகம் சீராகிவிடும் என்று பொறுத்திருந்துள்ளனர். ஆனால் மின்சாரம் வந்தபாடில்லை. ஒரு மணிநேரத்திற்கு மேலாகியும் மின்சாரம் வரவில்லை. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். பின்னர் என்னதான் நிகழ்ந்தது என துணை மின் நிலையத்திற்கு சென்றால் தெரியும் என சிலர் துணை மின் நிலையத்திற்கு சென்று பார்த்தனர். அப்பொழுது அங்கு ஊழியர் மதுபோதையில் மின்சாரத்தை அணைத்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்த காட்சியை கண்டு அதிர்ந்தனர். மின் ஊழியரான அறிவான்மொழி கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் மதுபோதையில் கிடந்தது தெரியவந்தது. இரவு 10 மணிக்கு லைன் மாற்றிவிட மின்சாரத்தை அணைத்த பாலசுந்தரம் மதுபோதையில் மீண்டும் மின் இணைப்பை கொடுக்காமல் கீழேயே போதையில் படுத்து தூங்கி விட்டார். அதன்பிறகு சக ஊழியரைக் கூட்டிவந்து மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது. அதன்பிறகே நிம்மதி மூச்சு விட்டனர் சுற்றுவட்டார பொதுமக்கள்.