Skip to main content

அரசு அலுவலகத்தில் வெடித்து சிதறும் மின் ஒயர்கள்... உயிர் பயத்தில் அலறிய ஊழியர்கள்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

Electrical wires exploding in government office

 

சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.  இந்த அலுவலகத்தில் தற்போது வட்டாட்சியர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.  இந்தநிலையில் தினமும்  வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கிறார்கள். இந்த நிலையில்  வட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து அலுவலகத்தில் பொறுத்தப்பட்ட மின் ஒயர்கள் அடிக்கடி வெடித்து அலுவலகத்தில் உள்ள கணினிகள், மின்விசிறிகள் உள்ளிட்ட எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பழுதாகி வருகிறது.

 

இதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 11 மணிக்கு கீழ்த்தளத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மேல்தளத்தில் உள்ள குடிமைப்பொருள் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென பெருத்த சத்தத்துடன் மின் ஒயர்கள் வெடித்து தீ பிழம்பாகக் கக்கியது. மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்ட மின் விளக்குகளும் வெடித்துச் சிதறியது. இதனைப் பார்த்த அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள்  மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள்.

 

இதேபோல் பலமுறை நடந்துள்ளது.  மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் பெரிய விபத்து ஏற்பட்டு ஊழியருக்கோ அல்லது  பொது மக்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால்  மட்டுமே  இவர்கள் திரும்பிப் பார்ப்பார்கள் என்று பொது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.  எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஊழியர்கள் மற்றும் பொது மக்களை உயிரைக் காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நடவடிக்கை இல்லை என்றால் அலுவலகத்தைப் பூட்டி விட்டு மாவட்ட ஆட்சியரிடம் சாவியை ஒப்படைக்கப்போவதாக  கூறுகின்றனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்