சென்னை மாதவரத்தில் கொசு விரட்டி உருகியதில் ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மணலி எம்.எம்.டி.ஏ இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் உடையார். சொமேடோவில் வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு உடையார் பைக் விபத்தில் சிக்கினார். தொடர்ந்து அவர் கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்த்துக் கொள்வதற்காக அவரது தாயார் ஊரில் இருந்து வந்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு 3 குழந்தைகளுடன் தாயார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது மின்சார கொசு விரட்டி ஒன்றை ஆன் செய்துவிட்டு தூங்கியுள்ளனர். அப்பொழுது திடீரென அந்த மின்சார கொசு விரட்டி உருகி கீழே இருந்த அட்டைப்பெட்டியில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதனால் மின்சார கொசுவிரட்டி பாட்டிலில் இருந்து திரவமானது கீழே கொட்டி சிதறியது. அதிலிருந்து ஏற்பட்ட வாயு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதே நேரம் அட்டைப்பெட்டியில் தீப்பிடித்ததால் தீ விபத்தும் ஏற்பட்டது. இந்த புகையில் சிக்கிய மூதாட்டி மற்றும் அவரது பேத்திகள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காலையிலிருந்து நீண்ட நேரம் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினருக்கும் சந்தேகம் ஏற்பட்டு காசல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலைத் தொடர்ந்து, மாதவரம் பால் பண்ணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு 4 பேர் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொசு விரட்டி உருகி விழுந்து அதனால் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.