
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 7-ந் தேதி வியாழக்கிழமை இரவு பெருந்துறையில் பிரச்சாரத்தை முடித்தார். பெருந்துறை பேருந்து நிலையம் அருகே நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி,
"அத்திக்கடவு-அவினாசி திட்டம் இந்தப் பகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவுத் திட்டமாக இருந்தது. அந்த திட்டத்தை முழுவதும் மாநில அரசின் நிதியுடன் சுமார் ரூபாய்.1,650 கோடியில் எனது அரசு நிறைவேற்றியது. இன்னும் ஒரு ஆண்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். குளம், குட்டைகளில் நீர் நிரம்பி நிலத்தடி நீர் பெருகி, விவசாயத்துக்கும், குடிப்பதற்கும் தேவையான நீர் கிடைக்கும். இன்னும் 2 ஆண்டுகள் கழித்து பெருந்துறை தொகுதியில் இருந்து வெளியூர் சென்று திரும்பியவர்கள் இங்கு வந்தால், நாம் பெருந்துறை தொகுதியில் இருக்கிறோமா? இல்லை ஏதேனும் டெல்டா மாவட்டத்துக்குள் வந்து விட்டோமா? என்று ஆச்சரியப்படும் வகையில் மாற்றம் இருக்கும்.
எந்த வாக்கு கொடுத்தாலும் அதை நிறைவேற்றுகிற அரசாக எனது அரசு இருக்கும். 'பெருந்துறை தொகுதியில் 800 அடி ஆழத்தில் ஆழ்துளை போட்டால்தான் தண்ணீர் கிடைக்கும். அதுவும் நல்ல தண்ணீராக இருக்காது. இங்கே நல்ல நிலையான தண்ணீர் வேண்டும்' என்று உங்கள் தொகுதி எம்.எல்.ஏ., சகோதரர் தோப்பு வெங்கடாஜலம் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது கோரிக்கை வைத்தார். எனது ஆட்சியிலும் வேண்டிக் கொண்டார். ரூபாய் 227 கோடியில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கரோனா தொற்றுப் பரவ தொடங்கியது. அதிலிருந்து 8 மாதங்கள் கடுமையான காலகட்டத்தில் தொழிலாளர்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். அப்போது ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. 8 மாதங்கள் இலவசப் பொருட்களை வழங்கி ஏழை மக்களைக் காப்பாற்றினோம். காய்ச்சல் முகாம்கள் நடத்தி பல லட்சம் பேரை பரிசோதனை செய்து நோய்த் தொற்று கண்டறியப்பட்டு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல் மருத்துவப் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று பரிசோதனைகள் செய்து, அதன்மூலம் நோய் கட்டுப்படுத்தப்பட்டது. நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ முறை வசதிகளும் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அரசின் எல்லாத் திட்டங்களையும் சிந்தாமல் சிதறாமல் மக்களுக்கு வழங்கி வருகிறோம். கரோனா காலத்தில் ரூபாய்.1,000 வழங்கியதை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூபாய். 2 ஆயிரத்து 500 வழங்கி வருகிறோம். இதனையும் தடுக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதை முறியடித்து ஏழை மக்களுக்கு இந்த தொகையைக் கொடுத்து வருகிறோம். மக்களுக்கு உதவித்தொகை கொடுப்பதை தடுக்கும் தலைவராக ஸ்டாலின் உள்ளார்.
அவர் பொய் அறிக்கைகள் வெளியிட்டு உள்ளார். இப்போது ஒரு சவால் விட்டிருக்கிறார். 'எடப்பாடி பழனிசாமி யார் தயவில் ஆட்சிக்கு வந்தார்' என்று கேட்டுள்ளார். உங்கள் தந்தை யார் தயவில் ஆட்சிக்கு வந்தார். மக்கள், அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் வாக்களித்தனர். ஆட்சியில் இருந்தபோதே அவர் இறந்தார். அவரது இறப்புக்கு காரணம் யார்? அவரது இறப்புக்குப் பின்னர் நாவலர்தான் முதலமைச்சராக வரவேண்டும். ஆனால் கலைஞர் தில்லு முள்ளு செய்து, சதித் திட்டம் தீட்டி ஆட்சிக்கு வந்தார். எனவே என்னைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது.
என் மீதும், அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். உண்மையிலேயே முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளை விரைந்துமுடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதை மறைக்கும் வகையில் அமைச்சர்கள் மீதும், என் மீதும் பொய்யான புகார்களைத் தெரிவிக்கிறார்கள். தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட்டால், அவர்கள் எங்கே செல்வார்கள் என்பது தெரியும். எங்கள் அமைச்சர்கள் களி சாப்பிடுவார்கள் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அவருடைய அமைச்சர்கள் தான் களி சாப்பிடுவார்கள். அவருடைய மகன் உதயநிதி பதவிக்கு வர மூத்த அமைச்சர்கள் இடையூறாக இருப்பார்களோ என்று ஸ்டாலினே வழக்கை விரைந்து முடிக்கும் வகையிலும், அப்புறப்படுத்தும் வகையிலும் ஊழல் பேச்சை தற்போது கையில் எடுத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஊழல் பிரச்சனை தொடர்பாக விவாதம் செய்யலாம் என்று நான் அழைத்தேன். அதற்கு அவர் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை முடித்துவிட்டு வாருங்கள் பேசலாம் என்கிறார். அந்த வழக்குகளைப் போட்டதே தி.மு.க.தான். ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து அறிக்கையை மூடி முத்திரையிட்டு வழங்க வேண்டும் என்று கூறி இருந்தது. அதன்படி ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை கொடுத்த உரையைப் பிரிக்காமலேயே சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தோம். அதை 3 நீதிபதிகள் விசாரித்து எங்கள் மீதான வழக்கை விசாரிக்க உகந்ததல்ல என்று தடை விதித்தனர். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை விட மு.க.ஸ்டாலின் அறிவாளியா? நீதிபதியே உகந்ததல்ல என்று சொன்ன வழக்கு தொடர்பாக பேசுவதாக இருந்தால் நீங்க வாங்க பேசுவோம். எந்த துறை குறித்தும் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நாங்கள் பதில் தருகிறோம்.
என் மீது டெண்டரில் ஊழல் என்று கவர்னரிடம் புகார் அளித்து உள்ளார். டெண்டரே போடாமல், பணமே ஒதுக்காமல் எப்படி ஊழல் செய்யமுடியும். எதுவும் படிக்காமல், யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே கொண்டு கவர்னிடம் கொடுத்து நாட்டு மக்களை ஏமாற்றுகிறார். அ.தி.மு.க. கட்சிக்கும், அரசுக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெருகி வருவதால் இவ்வாறு குற்றம்சாட்டி வருகிறார். எப்படியாவது ஆட்சிக்கு வர துடிக்கிறார். மக்கள் அனைவரும் தெளிவாக உள்ளனர். உங்கள் பருப்பு வேகாது. நாடகம் எடுபடாது. நான் உறவினருக்கு டெண்டர்கள் கொடுத்ததாகக் குற்றம் சாட்டுகிறார்.
நான் நடத்திய எந்த டெண்டராக இருந்தாலும், ஒளிவு மறைவின்றி இ-டெண்டர் முறையில் நடக்கிறது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் படிவம் வழங்கப்பட்டு, அதைப் பெட்டியில் போட்டு ஒப்பந்தம் முடிவுசெய்யும் வழக்கம் இருந்தது. எனவே பழைய முறையில்தான் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி நான் டெண்டர் கொடுத்ததாகக் கூறப்படும் உறவினருக்கு தி.மு.க. ஆட்சியிலேயே 8 டெண்டர்கள் கொடுத்திருக்கிறார்கள். எந்த உறவு முறையிலும் நான் டெண்டர் கொடுத்தவர் இல்லை என்பதை மு.க.ஸ்டாலின் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஏற்கனவே மக்கள் உங்களைப் புறக்கணித்து விட்டார்கள். ஒரு கட்சித் தலைவராக இருக்கும் நீங்கள், இவ்வாறு பேசலாமா? எனவே உறவினருக்கு டெண்டர் வழங்கினேன் என திட்டமிட்டு பழிகூறி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட ஊழல்களின் பட்டியல் வெளிவருகிறது. புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ரூ.200 கோடி டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் ரூ.430 கோடி கொடுத்திருக்கின்றனர். இந்த ஊழல் தொடர்பான வழக்குக்கு தடை ஆணை பெற்றுள்ளனர். தடையை நீக்கிவிட்டு வந்தால், அதைப் பற்றியும் விசாரிப்போம். தி.மு.க. ஆட்சியில் சாலை பணியாளர் நிதி ஒதுக்கியதில் 72 சதவீதம் கூடுதல் நிதியும், மற்றொரு வழக்கில் 68 சதவீதம் கூடுதல் நிதியும் வழங்கப்பட்டு உள்ளது. எனவே ஊழல் செய்பவர்கள் தி.மு.க.வினர்தான்.
நாங்கள் நேர்மையான வழியில் ஆட்சிசெய்து வருகிறோம். நான் கிராமத்து எடப்பாடி பழனிசாமி தானே என்று நினைத்து நான் பதவி ஏற்றதும், ஆட்சி ஒரு மாதத்தில் கலைந்துவிடும், 6 மாதத்தில் கலைந்துவிடும், 1 ஆண்டில் முடிந்துவிடும் என்றெல்லாம் கூறினார். 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து இருக்கிறேன். அடுத்த ஆட்சியும் எனது தலைமையிலான ஆட்சி தான். ஜெயலலிதா, 'எனக்குப் பிறகும், அ.தி.மு.க. நூறாண்டு காலம் ஆட்சியில் நீடிக்கும்' என்று கூறினார். அதேபோல் இந்த ஆட்சி நீடிக்கும். அ.தி.மு.க. அம்மாவின் ஆசியுடன் வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும்.
உண்மை, தர்மம், நீதி வெற்றிபெறும். சட்டமன்றத் தேர்தலில் ஏமாறுவதற்கு தயாராக இல்லை. நாங்கள் சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிடுவோம். சிறந்த திட்டங்களைக் கொடுப்போம். எம்.ஜி.ஆர், அம்மா ஆட்சியைத் தருவோம். கடந்த தேர்தலில் தேர்தல் அறிக்கையை அம்மா இந்த பெருந்துறை மண்ணில்தான் வெளியிட்டார். இந்த மண் ராசியான மண். சொல்லப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது" என்றார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டுத் தொகுதிக்களுக்கும் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் எடப்பாடி எல்லா இடங்களிலும் பிரச்சார வேனிலேயே நின்றபடி பிரச்சாரம் செய்தார். பெருந்துறையில் மட்டும் எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாஜலம் ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட மேடையில் பேசினார். எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாஜலம் பழனி முருகனின் ஆயுதமான வீரவேல் மற்றும் வாள் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடிக்கு கொடுத்து அசர வைத்தார்.
'ஜெ' வழியில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை இதே பெருந்துறையில் தான் எடப்பாடி பழனிசாமி வெளியிட உள்ளார் எனக் கூறுகிறார்கள் அ.தி.மு.க. சீனியர் நிர்வாகிகள்.