18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 10.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 219 இடங்களிலும், மற்றவை 30 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடப்பதாக விமர்சனம் எழுந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் முகவர்கள் திருப்தியடையும் வகையில் வாக்குகளை எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தபால் வாக்குகளை அவசரப்படாமல் எண்ணவேண்டும் என்பதும் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையில் இடம் பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் 36 இடங்களில் திமுக கூட்டணியும், அதிமுக 3 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.