நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.