Skip to main content

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் குறித்துத் தேர்தல் ஆணையம் விளக்கம்!

Published on 18/09/2024 | Edited on 18/09/2024
The Election Commission explained the tenure of local govt representatives

தமிழகத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும். இவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டுத் தேர்வு செய்யப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதன்படி தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 27 மாவட்டங்களில் உள்ள கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வார்டு மறுவரையறை செய்யப்பட்டு 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 9 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.

அதன்படி 2019ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்வானவர்களின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதனால் இதற்கான தேர்தல் நடத்தும் பணியை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் கடந்த 2021ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முன்கூட்டியே முடிவடைய உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் தங்களின் பதவிக்காலம் முன்கூட்டியே முடிவுக்கு வருகிறதா? என்பது பற்றி கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் பதிலளித்து விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த  2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வரை உள்ளது.  எனவே அவர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடைய உள்ளதா? என்ற ஐயம் தெரிவித்து, அது தொடர்பான கடிதங்கள் மாநில தேர்தல் ஆணையத்துக்கு வரப்பெற்றுள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். அதோடு கிராம ஊராட்சி தலைவர்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்