தாய், தந்தை யாருமில்லை, மின்சாரம் இல்லை, ஆதார் இல்லை, அடையாள அட்டைகள் ஏதும் இல்லை அதனால் உதவித் தொகையும் இல்லை. கடும் வெயிலின் அனல் காற்றுக்கு கொதிக்கும் சூட்டில் அசைவற்றுக் கிடக்கும் மாற்றுத் திறனாளி சிறுவனை 2 மூதாட்டிகளே கவனித்து தூக்கிச் சுமக்கிறார்கள். அரசாங்கமும், அதிகாரிகளும் சற்று மனமிறங்கினால் மின்சாரமும், உதவித் தொகையும் கிடைக்கும்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வடக்கு சரபோஜி தெருவைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் - சந்தரம்பாள் தம்பதி இவர்களின் ஒரு மகள் மாற்றுத்திறனாளி. கடந்த 2011 ஜூலை 23 ந் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு மணிகண்டன் என பெயர் வைத்தனர். சில வருடங்களில் மணிகண்டன் உடல்நிலையில் படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டு அசைவற்றுப் படுத்த படுக்கையில் கிடக்கும் மாற்றுத்திறனாளி ஆகிவிட்டான். மாற்றுத்திறனாளி பெண்ணின் தந்தை செல்வராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட அடுத்த சில ஆண்டுகளில் மாற்றுத்திறனாளி மகளும் மடிந்தார். நடக்க முடியாத படுத்த படுக்கையாக கிடக்கும் தனது பேரனை பராமரித்து தூக்கிச் சுமக்கும் பணியை முழுமையாக ஏற்றார் சுந்தரம்பாள். சுந்தரம்பாளுக்கு துணையாக அவரது சகோதரியும் கூடவே வந்துவிட்டார்.
பர்மா காலனியில் ஒரு வீட்டில் தங்கி இருக்கும் மூதாட்டிகள் அசைவற்றுக் கிடக்கும் மாற்றுத் திறனாளி சிறுவனை பராமரித்துக் கொள்ள ஒரு மூதாட்டி வீட்டில் இருக்க மற்றொரு மூதாட்டியான சுந்தரம்பாள் கூலி வேலைக்குச் சென்று கிடைக்கும் சொர்ப்ப வருமானத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனுடன் வாழ்ந்து வருகின்றனர். கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மின்சாரம் இல்லாத வீட்டிற்குள் கிடக்க முடியாமல் வெக்கையில் தவிக்கும் சிறுவனுக்கு இரு மூதாட்டிகளும் மாற்றி மாற்றி விசிறிக் கொண்டே இருக்கிறார்கள். மின் இணைப்பு பெற்றுத் தருவதாக சிலர் அந்த மூதாட்டிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு மின் இணைப்பு பெற்றுத் தரவில்லை.
மற்றொரு பக்கம் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு மாதாந்திர உதவித் தொகை வருகிறதா என்றால்... “அதுக்கு யாரு தம்பி வாங்கித் தருவாங்க. அந்த மணிகண்டன் பயலுக்கு பிறந்த சர்டிபிகேட் மட்டும் தான் இருக்கு ஆதார் இல்லை. ஆதார் எடுக்க அப்பா, அம்மா கைரேகை வேணுமாம் அவங்க யாரும் இல்லாதப்ப எப்படி ஆதார் எடுக்கிறது. ஆதார் இருந்தா தான் மாற்றுத்திறனாளி சான்று கிடைக்குமாம் அந்த சான்று இருந்தா தான் உதவித் தொகை கொடுப்பாங்களாம் நாங்க யாருகிட்ட போய் இதெல்லாம் வாங்குறது. அதனால் தள்ளாத வயசுல கூலி வேலைக்கு போவேன் எங்க அக்கா மணிகண்டனை பார்த்துக்கும் வீட்ல இருக்கும். நாங்க இருக்கிற வரைக்கும் அவனை பாதுகாப்போம்.
இப்ப வெயில் ரொம்ப இருக்கா வீட்டுக்குள்ள கிடக்க முடியாத தவியா தவிக்கிறான் கரண்ட் இருந்தா ஒரு காத்தாடியாவது வாங்கி வைக்கலாம் அதுக்கும் வழியில்ல. அதனால அவன் கஸ்டப்படுறதை பார்கவே வேதனையா இருக்கும் அதனால விசிறிக்கிட்டே இருக்குறோம். அரசாங்கம், அதிகாரிகள் மனசு வச்சால் மணிகண்டனுக்காக கரன்ட் கொடுத்துட்டு ஆதார் எடுத்து மாற்றுத்திறனாளி சான்று கொடுத்து உதவித் தொகை கிடைக்கச் செய்தால் புண்ணியமா போகும். அவங்க குடும்பங்களும் நல்லா இருக்கும். வெளியூர்களுக்கு போய் இந்த சான்று வாங்கா அவனை தூக்கி போக எங்க உடம்புல சக்திமும் இல்ல கார்ல போக பணமும் இல்லை. அதனால அப்படியே போட்டு வச்சுட்டு இருக்கிறோம்” என்றார் சுந்தரம்பாள் பாட்டி கண்ணீரோடு. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இந்த மாற்றுத்திறனாளி சிறுவனும் அவனுக்காக 2 மூதாட்டிகளும் படும் வேதனையை நினைத்து சிறப்பு நடவடிக்கை எடுத்தால் நல்லது. அதிகாரிகள் மனது வைப்பார்கள் என்று நம்புவோம்.