2017 அக்டோபர் 20 ம் தேதி வரை தரங்கம்பாடி, பொறையார், பகுதி என்றாலே டேனிஷ் கோட்டையும், பிரிட்டீஸ்காரர்களின் கட்டிடங்களும், கடலும் தான் மக்கள் மனதில் நிலைத்து நின்றது. ஆனால் 21 ம் தேதி முதல் பனிமனைகட்டிட இடிபாட்டில் சிக்கி இறந்த 8 போக்குவரத்து ஊழியர்களின் கொடூரமான இறப்புதான் நினைவுக்கு வரும். அந்த கொலைக்கான பெருமை முழுக்க முழக்க அதிமுக அரசையேசாரும்.
நாகை மாவட்டம், பொறையாறில் தமிழக அரசின் போக்குவரத்துக்கழக பாடிகட்டும் பிரிவும் பனிமனையும் அமைந்துள்ளது. அங்கு 2017 அக்டோபர் 20 ம் தேதி இரவுப் பணியை முடித்துவிட்டு, அதிகாலையில் பணிக்குச் செல்ல வேண்டிய ஓட்டுநர், நடத்துநர்கள், மெக்கானிக்கள் என 25-க்கும் மேற்பட்டவர்கள் பணிமனையின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள பாழடைந்த தொழிலாளர்கள் பிரிவு கட்டடத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 3.30 மணியளவில் கட்டடத்தின்மேற்கூரை முழுமையாக இடிந்து விழுந்து கோரமுகத்தை காட்டியது. அயர்ந்து உறக்கத்தில் இருந்த அப்பாவி ஊழியர்கள் உறங்கியபடியே அதில் சிக்கினர்.
அந்த கோரசம்பவத்தில் பெரம்பூர் முனியப்பன் (41), புன்செய் சந்திரசேகர் (38), காளகஸ்தினாபுரம் பிரபாகரன் (53), பாலு (51), கிடங்கல் மணிவண்ணன் (52), பொறையாறு தனபால் (49), திருக்குவளை அன்பரசன் (25), ஆவராணி புதுச்சேரி ராமலிங்கம் (56) ஆகிய 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அந்தகட்டிடம் ஒருநூற்றாண்டை கடந்த பழமையான கட்டிடம், சக்திவிலாஸ் எனும் தனியாரால் உறுவாக்கப்பட்டது, பிறகு அரசுடமையானதும் ஒரு செங்கல்லைக்கூட நடாமல் இன்றுவரை செயல்பட்டுவருகிறது.
மக்கள் மனதில் நிற்கும் சக்திவிலாஸ் ;
கீழத்தஞ்சை மக்களின் மனம்கவர்ந்த பேருந்துகளை இயக்கியஸ்ரீ சக்திவிலாஸ் நிறுவனத்தை அந்த பகுதி மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். அந்த காலத்திலேயே ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி பிரம்மாண்டமான கட்டிடங்களுடன் கூடிய தென் இந்தியாவின் மிகப்பெரும் தனிநபர் போக்குவரத்து சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் பொறையாரை சேர்ந்த வீரப்பபிள்ளை. சாதாரன பால் வியாபாரியின் மகனாக 1906 இல் பிறந்தவர். தனது 12 ஆம்வயதில் தந்தையை இழந்தவர், பொறையாரில் இன்றும் இயங்கிவரும் பழமை வாய்ந்த தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் கடைநிலை ஊழியராக பணியில் சேர்ந்தார்.
படிப்பறிவு இல்லாமல் வெறும் கையெழுத்து மட்டுமே போடத் தெரிந்த வீரப்பபிள்ளைக்கு அவர் வேலைப்பார்த்து வந்த முதலாளி அவர் வைத்திருந்த காரை 1922 ல் குறைந்த விலைக்கு கொடுத்தார். அதை கொண்டு ஸ்ரீ சக்திவிலாஸ் பஸ் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவங்கி பொறையாரிலிருந்து மயிலாடுதுறை வரை அந்தக்காரை பொதுமக்களின் வாகனமாக ஓட்டி வந்தார். பயணச்சீட்டு போடுவதிலிருந்து காரை துடைப்பது வரை எல்லா வேலைகளும் அவரே செய்து வந்தார். வாகன போக்குவரத்து ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தபோது வீரப்ப பிள்ளை ஓட்டிய கார் மக்களை வெகுவாய் கவர்ந்தது. மக்களின் நன் மதிப்பைபெற்று கடுமையாக ஓய்வின்றி உழைத்ததால் மேலும்சில பேருந்துகளை விலைக்கு வாங்கினார்.
பொறையார் - மயிலாடுதுறை, பொறையார் - காரைக்கால், மயிலாடுதுறை – நாகப்பட்டினம், நன்னிலம் - நாகப்பட்டினம், மன்னார்குடி – பட்டுக் கோட்டை, கும்பகோணம் - காரைக்கால் ஆகிய மார்க்கங்களில் பேருந்துகளை இயக்கினார். ஏராளமான கிளைகளை உருவாக்கி ஆங்காங்கே பணிமனைகளையும் அமைத்தார். பேருந்துக்கு தேவையான உதிரி பாகங்களை ஜெர்மனி நாட்டிலிருந்து வரவழைத்து 1943 இல் ஸ்ரீ சக்தி விலாஸ் பஸ்சர்வீஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை பிரம்மாண்டமாய் பொறையாரில் அமைத்தார். அதிகமான சம்பளத்தை கொடுத்து மிகப்பெரிய பொறியாளர்களையும், மெக்கானிக்குகளையும் பணியில் அமர்த்தினார். லண்டனிலிருந்து லேத் மிஷின்களை வரவழைத்து பேருந்துகளை வடிவமைக்கும் பிரிவையும் அங்கேயே தொடங்கினார். அக்காலத்திலேயே பொறையார் பஸ் பாடிக்கட்டுவதில் தனி இடம் பிடித்திருந்தது. இன்றும் கூட கூண்டு கட்டும்பிரிவு சிறப்பாய் செயல்பட அவரேகாரணம்.
1947 இல் இந்நிறுவனத்தின் பேருந்துகள் 34 மார்க்கத்தில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை சுமந்து சென்றன. 500க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் போக்குவரத்து நிறுவனமாக பொறையார் ஸ்ரீசக்தி விலாஸ் பஸ் சர்வீஸ் விளங்கியது. இந்நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்க தொடங்கிய பின் அங்கு நடைபெறும் விழாக்களில் மாவட்ட ஆட்சியர்களும், அமைச்சர்களும் கலந்துகொள்ள தொடங்கினர். பெருந்தலைவர் காமராஜர், அப்போதைய தொழில்துறை அமைச்சர் வெங்கட்ராமன் ஆகியோர் பலமுறை பொறையாருக்கு வருகை புரிந்துள்ளனர். நிறுவனத்தை வளர்க்க அயராது பெரும் பாடுபட்டார் வீரப்ப பிள்ளை. இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டத்தில் டயர், இரும்பு,உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோதும் 1952இல் வீசிய புயலின்போதும் ஸ்ரீசக்தி விலாஸ்நிறுவனத்தின் பல கிளைகளில் பேருந்துகள் பலத்த சேதத்தை சந்தித்தன. தொழில் போட்டியாலும் பல வழக்குகளையும் வீரப்பபிள்ளை சந்தித்தார். எல்லா சோதனைகளையும் தன்னம்பிக்கையுடன் சாதனையாக்கி ஜெயித்துக்காட்டினார். தனது மகன் பார்த்தசாரதியை இங்கிலாந்துக்கு அனுப்பி ஆட்டோ மொபைல் துறையில் இன்ஜினியரிங் படிக்க வைத்து, 1956இல் பார்த்த சாரதியை நிறுவனத்தின் பொதுமேலாளராக பொறுப்பு ஏற்கவைத்தார்.
1963இல் தனது 57ஆவதுவயதில் வீரப்ப பிள்ளை இறந்து போனார். அதன் பின்னர் அவரதுமகன் பார்த்தசாரதி நிறுவனத்தை ஏற்று நடத்தி வந்த காலத்தில் , 1972 இல் தமிழக அரசு பஸ் போக்குவரத்தை நாட்டுடமையாக்கும் சட்டத்தை கொண்டு வந்து, அந்த இடங்களில் சோழன் போக்குவரத்துக் கழகமாக தற்போதுசெயல்பட்டுவருகிறது.
பழமையான பாழடைந்த கட்டிடம்;
1974 இல் அரசுடைமையாக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை ஒருமுறைக்கூட இந்த பணிமனையையும், கட்டிடங்களையும் சீரமைக்கப்படாமல் போனதன் விளைவே, அந்த கோர விபத்து நடந்து 8 ஊழியர்களின் உயிரைப்பறித்தது என்பதே தொழிலாளர்களின் குறைகளாக இருக்கிறது.
" எஞ்சியுள்ள பணிமனைக்கட்டிடம் கூண்டுக்கட்டும் பிரிவு, பண்டகச்சாலை, சமையலறை, கேண்டியன், கழிப்பறை கட்டிடம் என எல்லாவற்றிற்கும் பிரம்மாண்டமான கட்டிடங்களை அப்போதே கட்டி உள்ளனர்.அவற்றை முறையாக பராமரிக்காததால் எல்லா கட்டிடங்களும் படுமோசமான நிலமையில் எப்போது இடிந்து விழும் என்கிற நிலையில் தான் உள்ளது. பாழடைந்த சமையலறையிலும், கேண்டியனையிலும் தான் அன்றாடம் உணவு உண்ணவேண்டியிருக்கு, மூக்கை பிடிக்காமல் கழிப்பறைக்குள் போகமுடியாது, மேலாளர் அறைமுதல், அனைத்து கட்டிடங்களும் எப்போது இடிந்து விழும் என்கிற அச்சம் மழைகாலம் துவங்கியதும் அதிகரித்துவிட்டது. ஓய்வறைக் கட்டிடம் இடிந்து விழுவதற்கு அலட்சியமே காரனம், 8 ஊழியர்களை அலட்சியத்தால் படுகொலை செய்த பின்னரும் மீதம் உள்ள பாழடைந்த கட்டிடங்களை இடிப்பதற்கு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காம மீண்டும் காவுகொடுக்க நினைப்பது வேதனையாக இருக்கு " என்கிறார்கள் ஊழியர்கள்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தரங்கம்பாடி வட்டச் செயலாளர் பி.சீனிவாசன் கூறுகையில், " உடனடியாக பொறையார் பணிமனையில் பாழடைந்த அனைத்து கட்டிடங்களையும் இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும். எடப்பாடிஅரசு தாங்கள் புகழ்பாடும் விழாக்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்ய காட்டும் ஆர்வத்தை தொழிலாளர்களின் உயிர்காக்க எந்தவிதஆர்வமும் கொள்ளாதது கண்டனத்திற்குரியது. உடனடியாக மற்ற கட்டிடங்களையும் இடிப்பதோடு விபத்து நடந்த பகுதியில் உயிரிழந்த ஊழியர்களின் நினைவாக நினைவுத் தூண் ஒன்றை அமைக்கவேண்டும், " என்கிறார் அவர்.