இன்று தோப்புத்துறையில் ஈகைத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நேற்று JAQH சார்பில் மர்கஸ் திடலில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டிருந்தது. கணிசமானோர் அதில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் இன்று ஜாமியா பெரிய பள்ளியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெருநாள் தொழுகையில் பங்கேற்றனர். சின்னப் பள்ளிவாசல், மலாக்கா பள்ளிவாசல், லெப்பை அப்பா பள்ளிவாசல் ஆகியவற்றில் பெண்கள் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொழுதனர். கரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈதுல் பித்ர் தொழுகைகள் பள்ளிவாசல்களில் நடைபெறாத நிலையில், இவ்வாண்டு மக்கள் எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கூடி ஒருவரையொருவர் ஆரத் தழுவிய உற்சாகமான சூழல் நிலவியது. இன்று கடும் வெயில் காரணமாக எல்லோரும் தொழுததும் அவரவர் வீடுகளுக்கு மக்கள் விரைந்தனர். முஸ்லிம் மாணவர் முன்னணி (MSF) சார்பில் பெருநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. முதல் மரக்கன்றை எம்.எஸ்.ஃஎப் நிறுவனர்களில் ஒருவரான மு.தமிமுன் அன்சாரி ஊன்றினார்.
பல இளைஞர்கள் அவரவர் தெருவில் கூடி நின்று குரூப் போட்டோ எடுத்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பலர் தங்கள் சகோதர சமுதாய நண்பர்களின் வீடுகளுக்கு விருந்துணவுகளை அனுப்பி வைப்பதும், அவர்கள் வருகை தந்து வாழ்த்து சொல்லும் நிகழ்வுகளும் வழக்கம் போல நிகழ்ந்தது. வீட்டு வாசலில் தர்மம் தேடி வந்தவர்கள் மாலை 4 மணி வரை வீதிகளில் வந்த வண்ணம் இருந்தனர்.
மாலை 5 மணிக்கு படே சாஹிப் மைதானத்தில் பெருநாள் சந்தை இருந்ததால் பெண்கள் கூட்டம் அங்கும் அலைமோதியது. வெயில் கடுமை காரணமாக மாலை 7 மணிக்கு பிறகே மக்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது.