ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்ததாக எழுந்த புகாரை அடுத்து 16 வயது சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை, இடைத்தரகர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் சிறுமியின் வயதைக் குறைத்து காட்டிய ஜான் என்ற நபரும் கைது செய்யப்பட்டார்.
பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியின் கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்வதை இவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு கருமுட்டை விற்பனையின் பொழுதும் 20 ஆயிரம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இடைத்தரகராகச் செயல்படும் மாலதிக்கு 5,000 ரூபாய் கொடுத்துள்ளனர். கருமுட்டையை கொடுத்து பணம் பெற ஏதுவாக சிறுமியின் வயதை 20 என காட்ட போலி ஆதாரத்தையும் உருவாக்கியுள்ளனர். இப்படி 8 முறை கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில மருத்துவமனைகளிலும் சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்டிருப்பது தெரிவந்தது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சு, ''நிர்ப்பந்தம் செய்து 16வயது சிறுமியிடம் இருந்து பலமுறை கருமுட்டையை அவரது குடும்பத்தினரே எடுத்து விற்றுள்ளனர். தானம் தர விரும்பினாலும்21 வயதான ஒருவரிடம் இருந்துதான் கருமுட்டையை எடுக்க முடியும். கருமுட்டை விற்பனையில் ஈடுபட்ட ஈரோடு, சேலத்தில் செயல்பட்டு வரும் சுதா, ஓசூர் விஜய்,பெருந்துறை ராம்பிரசாத் என நான்கு தனியார் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நான்கு மருத்துவமனைகளிலும் உள்ள நோயாளிகள் 15 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும்'' என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய சேலம் சுதா மருத்துவமனைக்கு மருத்துவத்துறையினர் சீல் வைத்துள்ளனர்.