" 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டை ரத்து செய்ய, அரசுக்குக் கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே, 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்." என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
'ஆன்லைன் ரம்மி' சூதாட்டம் காரணமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு தரப்புகளில் இருந்து ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
நேற்று தி.மு.க தலைவர் ஸ்டாலின், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், 'ஆன்லைன் ரம்மி' சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் தடை விதிக்காதது ஏன்? என அறிக்கை வாயிலாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.இந்நிலையில், 'ஆன்லைன் ரம்மி' சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டை ரத்து செய்ய அரசுக்குக் கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. அனைத்து ஆன்லைன் சூதாட்டங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அரசு பரிசீலித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம் என்றார். அதேபோல் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டியுள்ளது என்றார்.
7 பேர் விடுதலையில், தி.மு.கவுக்கு அக்கறை இல்லை. அவர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றியது அ.தி.மு.க அரசுதான். அ.தி.மு.க அரசுதான் 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொண்டுசென்றது. 7 பேர் விடுதலைக்காகக் குரல் கொடுத்து, உண்மையாகச் செயலாற்றியது அ.தி.மு.க.தான்.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பா.ஜ.கவின் 'வேல் யாத்திரை'க்குச் சட்டப்படி அனுமதி வழங்க இயலாது எனவும் தெரிவித்தார்.