Skip to main content

“சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு இயக்கமாக அ.தி.மு.க. திகழ்கிறது” - எடப்பாடி பழனிசாமி

Published on 19/12/2023 | Edited on 19/12/2023

 

சென்னை வானகரத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நேற்று (18-12-23) மாலை நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி கிறிஸ்தவ மக்களுக்கு நல உதவிகளை செய்தார். இந்த விழாவில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள அமைச்சர் பொன்னையன், ஜெயக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக சாதி - மதத்திற்கு அப்பாற்பட்டு மக்கள் விரும்பும் கட்சி. இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து போனார்கள் என்ற வரலாறு தான் இருக்கிறது. இந்த இயக்கத்துக்காக உழைத்தார்கள், உயர்ந்தார்கள் என்பதே உண்மையாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் கிறிஸ்தவ மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியிலோ அவை பறிக்கப்படும் நிலை தான் உள்ளது. கிறிஸ்தவ மக்களுக்கும் அதிமுகவுக்கும் உள்ள பாசப் பிணைப்பினை எந்த காலத்திலும் பிரிக்க முடியாது. வருங்காலத்திலும் இந்த பாசமும் நேசமும் வலுப்பெரும்.

சிறுபான்மை மக்களின் உண்மையான இயக்கமாக அதிமுக என்றும் செயல்படும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும். அப்போது தலித் கிறிஸ்துவர்களுக்கு அரசால் மறுக்கப்படும் முன்னுரிமைகள் மற்றும் சலுகைகள் கிடைக்க பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் மற்றும் ஜெருசலேம் புனித பயணத்திற்கு யாரையும் அனுப்பவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டம் மீண்டும் புத்துயிர் பெறும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்