தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வரும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ.1260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தை திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் மோடி, சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். பின்னர் மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அந்த இடத்தில் பத்து நிமிடம் உரையாற்றிய பிறகு பல்லாவரம் பகுதியில் பொதுமக்களிடம் 20 நிமிடம் உரையாற்றுகிறார்.
சென்னையில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடி, மாலை விமானம் மூலம் மைசூர் செல்கிறார். பின்பு மறுநாள் காலை 9.30 மணிக்கு தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வரும் பிரதமர் மோடி ஆஸ்கர் விருது வென்ற "தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள பாகன்கள் பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்திக்கிறார். பின் மசினகுடி வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூருக்கு செல்கிறார்.
இதனிடையே சென்னை வரும் பிரதமர் மோடியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசவுள்ளதாகத் தற்போது தகவல் கிடைத்துள்ளது. பிரதமர் மோடி தரப்பில் இருந்து எடப்பாடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் ஓ.பி.எஸ் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ், பிரதமர் மோடியை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, சந்திப்பதற்கு நேரம் கேட்டிருக்கிறோம் என்றும், ஆனால் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.