சென்னை அண்ணா அறிவாலய அரங்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு உரையாற்றுகையில், ''மக்களால் போற்றப்படக்கூடிய ஆட்சியாக திமுக இருக்கிறது. ஆனால் மக்களால் ஒதுக்கப்பட்ட பழனிசாமி தன்னுடைய பொறாமை தாங்க முடியாமல் திமுக அரசை பேசிவருகிறார். இப்படியெல்லாம் சாதனைகள் செய்து கொண்டும் மக்களின் உள்ளத்தில் ஆழமாக திமுக பதிந்து கொண்டிருக்கிறது. இன்னமும் இவர்களுடைய செல்வாக்கு வளர்ந்து கொண்டு இருக்கிறதே என்ற பொறாமையின் காரணமாக செல்லாக் காசாக இருக்கக்கூடிய பழனிசாமி திமுக ஆட்சியினுடைய செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
அதோடு விடவில்லை திமுகவின் கூட்டணி விரைவில் உடைய போகிறது என்று பேசுகிறார். இத்தனை நாட்கள் எடப்பாடி பழனிசாமி கற்பனையில் தான் மிதந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது அவர் ஜோசியராகவே மாறி இருக்கிறார். எப்பொழுது அவர் ஜோசியராக மாறினார் என்று எனக்கு புரியவில்லை. பழனிசாமியைப் பார்த்து நான் கேட்பது எங்களுடைய கூட்டணி என்பது ஏதோ தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; எங்களுடைய கூட்டணி என்பது பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; எங்களுடைய கூட்டணி என்பது கொள்கை கூட்டணி என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. எங்கள் கூட்டணிக்குள் விவாதங்கள் நடக்கலாம். எங்களுக்குள் பேச்சுக்கள் நடக்கலாம். எங்களுக்குள் பல விவாதங்கள் ஏற்படுகிறதே தவிர, விரிசல்கள் ஏற்படவில்லை.
பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனித்துக் கொண்டிருப்பார்களே அதுபோல பக்கத்து கட்சியில் என்ன பிரச்சனை என எடப்பாடி பழனிசாமி பார்த்துக்கொண்டிருக்கிறார். தன்னுடைய கட்சியை வளர்ப்பதற்கு யோகிதை இல்லை வளர்ந்திருக்கக் கூடிய கட்சியைப் பார்த்து; மக்களிடத்தில் ஓங்கி உயரமாக நிற்கக்கூடிய இயக்கத்தைப் பார்த்து ஜோசியம் செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தாலும் மழைக்காலத்தில் மக்களை சந்தித்தோம். இப்பொழுது ஆட்சி என்ற அதிகாரத்தில் இருக்கின்ற காரணத்தால் இன்றைக்கும் மக்களை சந்தித்து மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதைக் கேட்டு அறிந்து அதற்குரிய பணிகளை செய்கிறோம்''என்றார்.