Skip to main content

எந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் - முதல்வர்

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

பத்திரிகை மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும், கோலோச்சிய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபம் இன்று திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. மணிமண்டபத்தினை திறந்து வைத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உரையிலிருந்து., "மரியாதைக்குரிய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மண்டபத்தினை இன்று திறந்து வைத்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். பத்திரிகையின் அனைத்து துறைகளிலும் கற்றுத் தேர்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆற்றிய பணியினை கண்ட அவரது தந்தையார், ‘தினத்தந்தி’-யின் நிர்வாகப் பொறுப்பை 1959ஆம் ஆண்டு ஒப்படைத்தார்.  அச்சமயத்தில், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் இருந்து மட்டுமே தினத்தந்தி நாளிதழ் வெளிவந்து கொண்டிருந்தது. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நிர்வாகத் திறமையால், தினத்தந்தி நாளுக்கு நாள் வளர்ந்து, இப்போது பெங்களூர், மும்பை, புதுச்சேரி உள்பட 15 நகரங்களில் பதிப்பாகி வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த பெருமைக்குச் சொந்தக்காரர் மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தான் என்றால் அது மிகையாகாது.

 

edappadi palanisamy in sivanthi athithinar function


தினத்தந்தி வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்று அன்று தலைமை உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார். " ஓர் அமைப்பை தோற்றுவிப்பது என்பது கடினம். ஆனால் நல்ல முறையில் அமைந்த ஓர் அமைப்பினை யாரிடத்தில் ஒப்படைக்கிறோமோ, அவர்கள் அதில் ஒரு துளிகூட அக்கறை காட்டவில்லை என்றால், எவ்வளவு திறமையாக அந்த அமைப்பை அமைத்து இருந்தாலும், வெகு விரைவிலேயே அது கலைந்து விடக்கூடிய ஆபத்து உண்டு. அந்த விதமான நிலையில்லாமல் ஆதித்தனார் அமைத்துக் கொடுத்த ‘தினத்தந்தி’ நல்ல முறையில் இன்னும் நல்ல வளர்ச்சி அடையத்தக்க வகையில், மேலும்  பல்லாயிரக்கணக்கான மக்கள் விரும்பி படிக்கும் தன்மையிலேயே தினத்தந்தி நாளிதழ் இன்றைய தினம் நடக்கிறது என்றால், அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருக்கும் நம் மதிப்பிற்குரிய நண்பர் ஆதித்தினாரின் திருமகன் சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு உரிய பங்கு உண்டு என்று அப்பொழுது தெரிவித்தார்.  ஆதித்தினார் ஒரு நல்ல அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டும் அல்லாமல், அந்த அமைப்பை தொடர்ந்து நடத்த  தக்க பிள்ளையையும் பெற்றெடுத்தார் என்பது அவரது தனிச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகும்"என்று, திரு சிவந்தி ஆதித்தன் அவர்களை பாராட்டிப் பேசினார்கள்.

 

edappadi palanisamy in sivanthi athithinar function


தினத்தந்தி பத்திரிகை மட்டுமின்றி, 1962ஆம் ஆண்டு ‘ராணி’ வார இதழ் தொடங்கப்பட்டது.  திரு. ஆதித்தனார் அவர்கள் பாமர மக்களையும், நாளிதழ் படிக்க வைத்தார் என்றால், பட்டி தொட்டி மக்களிடம் வார இதழ் படிக்கும் பழக்கத்தை உருவாக்கித் தந்தவர் மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள். இதனைத் தொடர்ந்து ‘ராணி முத்து’, ‘ராணி காமிக்ஸ்’ ஆகிய  இதழ்களையும் தொடங்கினார்கள். இன்று தமிழ்நாடு  மக்களின் வீடுகளை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் ‘ராணி முத்து’ காலண்டர்களை வெளியிட்டவரும் திரு. பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள்தான்.

 இவர் திருச்செந்தூர் பகுதியில் பல கல்வி நிறுவனங்களை நிறுவி, அப்பகுதியில் உள்ள ஏழை மக்கள் கல்வி கற்க வழிவகை செய்தார்."இளைஞர்கள் படிக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயமும், நாடும் முன்னேற்றம் அடையும். படிக்க எந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்"  என்று  கூறியதோடு மட்டுமல்லாமல், அதை செயல்படுத்தவும் செய்தார் மரியாதைக்குரிய மறைந்த திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள். தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் புதிய பள்ளிக்கூடங்கள் அமைக்கவும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு கட்டடங்கள் கட்டவும் தாராளமாக நிதி உதவி செய்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு மாளிகையை கட்டிக் கொடுத்தவரும் மரியாதைக்குரிய சிவந்தி ஆதித்தனார் அவர்கள்.

 

edappadi palanisamy in sivanthi athithinar function


தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவராக இருந்த அவர், 1987ஆம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் பதவி வகித்த அவர், ஆசிய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் பல விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக 2000-ஆவது ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்திய துணைக் கண்டத்தில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் தொண்டினை வருங்கால சமுதாயத்தினரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அன்னாருக்கு வரலாற்றில் நீங்கா இடம் கிடைத்திடும் வகையிலும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பெருமைக்கும், புகழுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் மணி மண்டபத்தினை திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்." என உரையாற்றி மகிழ்ந்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்