தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்படுகிறது. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் (18.10.2021) சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்களிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள், நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுவருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த தொடர் சோதனைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பில், திமுக தங்களைப் பழிவாங்குவதற்காக தொடர்ந்து வழக்குகளைப் போடுவதாக ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.