துணை முதல்வர் ஒபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் தற்பொழுது ஒபிஎஸ்க்கு எதிராக எடப்பாடி அணி உருவாகி வருகிறது.
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை ஒபிஎஸ்க்கு எதிராக தங்கதமிழ்செல்வன் தான் ஒரு கோஷ்டியாக செயல்பட்டு வந்தார். அதன் பின் தங்கதமிழ்செல்வன் டிடிவி அணிக்கு தாவியதின் மூலம் ஒபிஎஸ்க்கு எதிராக தேனி மாவட்டத்தில் கோஷ்டி பூசல் இல்லாமல் இருந்துவந்தது.
இந்த நிலையில்தான் டிடிவி ஆதரவாளராக இருந்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் திடீரென எடப்பாடியை சந்தித்து ஆதரவு கொடுத்தார். அன்றுமுதல் ஜக்கையனும் மாவட்டத்தில் ஒரு தனி கோஷ்டியை உருவாக்கி கொண்டு எடப்பாடி அணி என செயல்பட்டுக்கொண்டு ஒபிஎஸ்சை மதிப்பதும் இல்லை மாவட்டத்தில் நடக்கும் கட்சி கூட்டங்களுக்கும், அரசு நிகழ்ச்சிகளுக்கும் கூட சரி வர கலந்து கொள்ளாமலேயே சென்னையில் முகாம் போட்டு எடப்பாடியிடம் காரியம் சாதித்து வருகிறார்.
அதன் அடிப்படையில்தான் தனது மகனுக்கு (பாலமணி மார்பன்) தேனி மாவட்ட மாணவரணி செயலாளர் பதவியை எடப்பாடி மூலம் வாங்கி கொடுத்து மகனையும் ஒபிஎஸ்க்கு எதிராக செயல்பட வைத்து இருக்கிறார். இந்த பொறுப்பு கிடைத்திற்காக ஜக்கையன் மகனும் எடப்பாடியை சந்தித்து ஆசி வாங்கினாரே தவிர மாவட்டத்தில் இருந்தும் கூட ஒபிஎஸ்சை கண்டு கொள்ளாமல் ஒபிஎஸ்க்கு எதிராக செயல்பட்டுக்கொண்டு எடப்பாடிக்கு ஆதரவாக ஜக்கையனும், அவருடைய மகனும் ஆதரவாளர்களை திரட்டி கொண்டு மாவட்டத்தில் எடப்பாடி அணியை உருவாக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் எடப்பாடி ஆரவாளரான ஜக்கையன் கோஷ்டியை சேர்ந்த கம்பம் கே.எம்.பட்டியை சேர்ந்த பால்பாண்டியன் என்பவர் "தேனி மாவட்ட எடப்பாடியார் பேரவை" என்ற பெயரில் ஒரு போஸ்டர் அடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அந்த போஸ்டரில் ஒபிஎஸ் படத்தை சிறிதாக போட்டு எடப்பாடி படத்தை சேரில் உட்கார்ந்து இருப்பது போல் பெரிதாக போட்டு இருக்கிறார். அதோடு ஜெ ஆட்சியை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வரும் "இரும்புமனிதர்" முதல்வர் கே.பழனிச்சாமி என புகழந்தும் போஸ்டரில் வாசகம் எழுதப்பட்டும் இருக்கிறது.
அதைக்கண்டு ஒபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள். ஆனால் தமிழகத்திலேயே எடப்பாடிக்கு என எந்த பேரையும் இதுவரை உருவாக வில்லை அப்படி இருக்கும்போது ஒபிஎஸ்சின் சொந்த மாவட்டத்திலேயே ஒபிஎஸ்க்கு எதிராக எடப்பாடியார் பேரவை உருவாகியிருப்பது கட்சிகாரர்கள் மட்டும்மல்லாமல் எதிர் கட்சியினர் மத்தியிலும் கூட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.