மழைக்கு முன் வாய்க்கால்களை தூர்வார கோரி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திருச்சி ஆற்றுப் பாசன பாதுகாப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர் .
கோரிக்கை மனுவை நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் முதன்மை அதிகாரி பாஸ்கரனிடம் வழங்கினர். அந்த மனுவில், விவசாயிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியதன் வாயிலாக தமிழக அரசு 2019- 20 ஆம் ஆண்டில் ஏரிகளை பாசன வாய்க்கால்களை தூர்வார திருச்சி ஆற்றுப் பாசன பாதுகாப்பு கோட்டத்திற்கு மட்டும் சுமார் 6 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியை கொண்டு மழைக்கு முன்பு சம்பா நெல் சாகுபடி செய்ய கடைமடை வரை காவிரி தண்ணீர் கிடைக்க பெருவளை வாய்க்கால், உய்யக்கொண்டான் வாய்க்கால், புதிய கட்டளை, மேட்டு கால்வாய், ஸ்ரீரங்கம், நாட்டு வாய்க்கால் மற்றும் நாட்டு பாதுகாப்பு கோட்டத்துக்கு உட்பட்ட ஏரிகள் அதன் வரத்து வாய்க்கால்களை காலதாமதமின்றி மழைக்கு முன்பு முறைகேடு எதுவும் நடைபெறாமல் தூர்வார வேண்டும். மேலும் பங்குனி வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
பின்னர் பத்திரிக்கையாளரிடம் பேசிய விஸ்வநாதன், மழைக்கு முன்பு கடைமடை வரை தண்ணீர் கிடைக்கும் வரை ஏரிகளை தூர்வார வேண்டும். தூர்வாரும் பணி முழுக்க விதிகளுக்குட்பட்டு நடத்த வேண்டும். அந்தந்த பகுதி விவசாயிகள் அழைத்து அவர்கள் முன்னிலையில் நேர்மையுடன் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் கடைமடை தண்ணீர் கிடைக்கும்.
மழை காலத்துக்குள் தூர்வாராவில்லை என்றால் விவசாயிகள் பட்டை நாமத்துடன் தமிழக முதல்வர் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம் என்றார்.