அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி 2 முறை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு வரும் 30 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அதே சமயம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 9வது முறையாக அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுகவில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையின் நகலைக் கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு செய்துள்ள நிலையில், அந்த வழக்கின் விசாரணை அக்.30 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.