உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் விண்டோஸ் (Windows) மென்பொருள் முடங்கியுள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்பத்துறை, வங்கி, விமானம், ரயில், மீடியா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிரவுட்ஸ்ட்ரைக் (CrowdStrike) என்ற அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் விண்டோஸை புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ப்ளு ஸ்கிரின் எரர் ( Blue Screen Error) ஏற்பட்டுள்ளதால் பயனாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இதன் காரணமாக சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட உலகம் முழுவதும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா, யுனைடட் உள்ளிட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு விமான சேவைகள் தாமதமாகும் என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விண்டோ செயலி முடக்கத்தால் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் எட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் இதன் காரணமாக தாமதமாக இயக்கப்பட்டது.
மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, ஹைதராபாத், கோவை, பெங்களூர், லக்னோ, மும்பை போன்ற பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லும் விமானங்களின் சேவை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாகியுள்ளது. இந்த சூழலில் அடுத்த கட்டமாக பயணம் மேற்கொள்வதற்கு பயணிகள் தொடர்ச்சியாக நீண்ட வரிசையில் நின்று உள்ளதால், செக் இன் படிவங்கள் கையால் எழுதிக்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 8 விமானங்களின் பயண சேவைகள் தொடங்க தாமதமாகும் எனவும், இந்த தாமதத்தினால் சென்று சேர வேண்டிய இடத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மும்பை, லக்னோ, ஹைதராபாத், டெல்லி ஆகிய விமான நிலையங்களுக்கு செல்லக்கூடிய எட்டு விமானங்கள் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மென்பொருள் சேவை மீண்டும் துவங்கிய பின் விமான சேவை சீராகும் எனவும் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.