நேற்று சென்னை வில்லிவாக்கத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அன்பரசு என்பவரிடம் ஏடிஎம் கார்டை புதுப்பித்துத் தருவதாகக் கூறி ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 53 லட்சம் ரூபாய் திருடப்பட்ட நிலையில் 24 மணிநேரத்தில் பணத்தை சைபர் கிரைம் போலீசார் கைப்பற்றியதோடு, இதுபோன்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிப்பது தொடர்பாக போலீசார் விளக்கமும் கொடுத்துள்ளனர்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அன்பரசு 50 லட்சம் ரூபாயை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வைப்பு தொகையாக டெபாசிட் செய்துள்ளார். ஆனால் அந்த தொகையை வங்கி நிர்வாகம் வைப்பு தொகையில் இருந்து சேமிப்பு தொகையாக மாற்றியுள்ளது. ஆனால் அதை மீண்டும் வைப்பு தொகையாக மாற்ற வேண்டும் என முயற்சி செய்துகொண்டிருந்த அன்பரசுவுக்கு வங்கியிலிருந்து அனுப்பப்படுவதாக நேற்று செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
அந்த குறுஞ்செய்தியை கிளிக் செய்த அன்பரசு லாகின் செய்து உள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வர ஓ.டி.பி எண்ணை அந்த மர்ம நபரிடம் பகிர்ந்திருக்கிறார். ஆனால் இறுதியில் அந்த அழைப்பு குறித்து சந்தேகம் அடைந்த நிலையில் அன்பரசு செல்போனை அவரது மகனிடம் கொடுத்து சோதனை செய்தபோது, 6 தவணையாக அவரது வங்கி கணக்கில் இருந்து மொத்தம் 53 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரிந்து அதிர்ந்து போனார்.
இதுகுறித்து உடனடியாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து செயல்பட்ட சைபர்கிரைம் காவல்துறையினர் 53 லட்சம் ரூபாயும் திருடப்பட்ட நபரின் கணக்கு செல்லாமல் தடுத்து பணத்தை பாதுகாத்துள்ளனர். ஆன்லைன் மூலம் இது போன்று வங்கி மோசடி திருட்டுகள் நடைபெறுவதால் தேவையற்ற குறுந்தகவல்களை திறப்பதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ள சைபர் கிரைம் காவல்துறையினர், பணம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டும். அப்படி 24 மணி நேரத்திற்குள் புகார் அளிக்கும் பட்சத்தில் பணத்தை மீட்பது எளிது எனவும் தெரிவித்துள்ளனர்.